தமிழர்த் திருநாளாம் தைப்பொங்கலன்று பச்சரிசி பொங்கல் வைத்து, இயற்கையையும், விவசாயத்திற்கு உறுதுணையாக உள்ள கால்நடைகளையும் வணங்குவது காலம் காலமாக கடைபிடிக்கும் வழக்கமாக இருந்து வருகிறது. பொங்கல் வைத்து வழிபடும்போது அரிசி, கரும்பு, வெல்லம் வரிசையில் கட்டாயமாக மங்கலப் பொருளான மஞ்சளும் இடம்பெறும். பொங்கல் பானையின் கழுத்துப் பகுதியில் மஞ்சள் கொத்துகளைக் கட்டித்தான் பொங்கலே சமைப்பார்கள். அந்தளவுக்கு பொங்கல் பானைக்கு நிகரான இடத்தை மஞ்சள் பிடித்திருக்கிறது. இத்தகைய மஞ்சள் விவசாயிகளுக்கு லாபம் கொடுக்கும் பயிராகவும் விளங்குகிறது. ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அட்டவணை அனுமன்பள்ளியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரது விளையும் மஞ்சளும் அப்படி மகத்தான லாபத்தை வாரி வழங்குகிறது. இவர் விளைவிப்பது முழுக்க முழுக்க இயற்கை மஞ்சள். ஆம், துளியளவும் ரசாயனம் கலக்காமல் இயற்கை இடுபொருட்களை மட்டுமே நிலத்தில் இட்டு மஞ்சள் விளைவிக்கிறார். இதன் காரணமாக விளைச்சல் கூடுதலாக கிடைத்து வருமானமும் கூடுதலாக கிடைக்கிறது. மஞ்சள் தோட்டத்தில் பராமரிப்புப் பணியில் பரபரப்பாக இருந்த நந்தகுமாரைச் சந்தித்தோம்.
“மற்ற விவசாயிகள் செய்வதைப் போல நானும் ரசாயன உரங்களைப் பயன்படுத்தித்தான் மஞ்சள் சாகுபடி செய்தேன். ஆனால் ஒருகட்டத்திற்கு மேல் எனது வயலில் போதுமான விளைச்சல் கிடைக்கவில்லை. பயிர்கள் வாட்டமில்லாமல் காணப்படும். விளைச்சல் மிகக் குறைவாக இருக்கும். நாம் தொடர்ச்சியாக பயன்படுத்திய ரசாயன உரங்கள்தான் மண்ணில் உள்ள சத்துக்களை அழித்து, மலட்டுத்தன்மையை உருவாக்கி விட்டன என்பதை உணர்ந்தேன். இதனால் இயற்கை வழி வேளாண்மையை கையில் எடுக்கலாம் என தீர்மானித்தேன். கடந்த 3 ஆண்டு களாக முழுக்க முழுக்க இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துகிறேன். தோட்டக்கலை அதிகாரிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த வேளாண் வல்லுநர்களின் அறிவுரையோடு தொழுவுரம், மண்புழு உரம் இட்டு மண்ணில் நுண்ணுயிர்ப் பெருக்கத்தை அதிகரிக்கச் செய்தேன். பின்பு பிடிஎஸ் 10 என்ற மஞ்சள் ரகத்தை சாகுபடி செய்ய ஆரம்பித்தேன்’’ என ரசாயன வெள்ளாமையில் இருந்து இயற்கை வெள்ளாமைக்கு வந்த கதையோடு பேச ஆரம்பித்த நந்தகுமார், மேலும் தொடர்கிறார். “நான் தற்போது 7 ஏக்கரில் மஞ்சளைப் பயிரிட்டு இருக்கிறேன். ஒரு ஏக்கரில் நடவுசெய்ய சராசரியாக 600 கிலோ விதைக் கிழங்குகள் வரை தேவைப்படும். மஞ்சள் நடவு செய்யப்படும் நிலத்தில் நடவுக்கு முன்பாக உயிர் உரங்கள் கொடுக்கப்படுகிறது. அதன்பின் நிலத்தில் பசுஞ்சாணம் மற்றும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கரைசல்கள் என அனைத்தையும் சேர்த்து நிலத்தை தயார் செய்ய வேண்டும். அதன்பின், தண்ணீர் விட்டு மஞ்சள் கிழங்கை நடவு செய்யத் தொடங்கலாம்.
மஞ்சள் செடியைப் பொருத்தவரை ஒரு செடிக்கும் அடுத்த செடிக்கும் இடையே 1.5 அடி இடைவெளி இருக்க வேண்டும். அதேபோல், ஒரு மஞ்சள் செடி வரிசைக்கும் அடுத்த மஞ்சள் செடி வரிசைக்கும் இடையே 20 அடி இடைவெளி இருக்க வேண்டும். இந்த அளவில் விதைத்தால்தான் மஞ்சள் நன்றாக வளரும். மஞ்சள் பொதுவாக 10 மாதப்பயிர். 3 மாதங்களில் பலன் கொடுக்கும் ஏதாவது ஒரு பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். இதற்கு வெங்காயம் நல்ல தேர்வு. மஞ்சள் வயலிற்கு வாரம் ஒருமுறை தண்ணீர் கொடுக்க வேண்டும். அடியில் கிழங்கு வைத்தபிறகு தண்ணீர் குறைந்தளவு கொடுத்து வந்தாலே போதும். போதிய நேரத்தில் களையெடுக்க வேண்டும். உரம், பூச்சிவிரட்டி எல்லாம் இயற்றை வழியில் உற்பத்தி செய்தவைதான். நிலத்தில் நவதானியங்கள் உள்ளிட்ட பயிர்களை விதைத்து உழுவதால் சத்துகள் நிறைந்து வளமாக மாறியிருக்கிறது. இந்த நிலம் இயற்கை விவசாயத்திற்கு பழக்கப்பட்டுவிட்டதால் பெரிய அளவில் பூச்சித்தொல்லை கிடையாது.
இயற்கை முறையில் சாகுபடி செய்தாலும் சில நவீன தொழில்நுட்பங்களையும் செயல்படுத்தி வருகிறேன். 7 ஏக்கர் மஞ்சள் பயிருக்கும் சொட்டுநீர் பாசனம் அமைத்து, ஆட்டோமெட்டிக் (தானியங்கி) இயந்திரத்தினை, கிணற்றுடன் இணைத்து பாசனம் செய்கிறேன். ரசாயன உரமிடும் மஞ்சள் தோட்டங்களில் வேரழுகல், கிழங்கு அழுகல், இலைப்புள்ளி, இலைக்கருகல் நோய் பாதிப்புகள் ஏற்படும். ஆனால் நான் பல்வேறு இயற்கை ஊக்கிகளை மட்டும் பயன்படுத்துவதால் மஞ்சளில் எவ்வித நோய் தாக்குதல் இன்றி, ஒரு ஏக்கருக்கு 40 குவிண்டால் (4 டன்) வரை மகசூல் கிடைக்கிறது. இது ரசாயன உரத்தைப் பயன்படுத்தி எடுக்கும் மகசூலைக் காட்டிலும் கூடுதல்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
நந்தகுமார்: 98427 69558.
மஞ்சளின் மகிமை
விவசாயிகளுக்கு நம்பிக்கை தரும் முக்கிய பணப்பயிர்களில் மஞ்சள் முதன்மையானது. மருத்துவக் குணங்கள் நிறைந்த மஞ்சள் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் பலவகையான நோய்களுக்கு எதிர்பொருளாக செயலாற்றுகிறது. இந்திய சமையலில் இன்றியமையாத இடத்தைப் பிடித்திருக்கிறது. இதன்காரணமாக பலவகையான அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் துணிகளுக்கு சாயமேற்றுவதிலும் மஞ்சள் பயன்படுத்தப்படுவதால் சந்தையில் மஞ்சளுக்கு எப்போதும் நல்ல வரவேற்புதான்.
புவிசார் குறியீடு
ஈரோடு மாவட்டத்தில் விளையும் மஞ்சளில் மட்டும் குர்குமின் என்ற வேதிப்பொருள் 3 முதல் 5 சதவீதம் கிடைக்கும். இதனால், ஈரோடு மாவட்ட மஞ்சளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் புவிசார் குறியீடும் ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இவ்வாறான மருத்துவ குணம் நிறைந்த மஞ்சளில், ரசாயனம் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி போன்ற எவ்வித நச்சுமின்றி இயற்கை முறையில் விவசாயத்தை ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற இயற்கையான முறையில் விளையும் மஞ்சள் மட்டுமின்றி அனைத்து பயிர்களுக்கும் மக்களிடமும், வியாபாரிகளிடமும் வரவேற்பு உள்ளது.
The post இயற்கை வேளாண்மையால் மகசூல் பெருகும் மஞ்சள் தோட்டம்! appeared first on Dinakaran.