நன்றி குங்குமம் தோழி
ஏப்ரல்-மே மாதங்களில் சாலையோர தர்பூசணிப் பழ வியாபாரத்திற்கு சிறிதும் குறைவின்றி விற்பனையாவது கம்பங்கூழே. ஆம்… கோடைக்காலத்தில் வெப்பத்தைத் தணித்து, குளிர்ச்சியைத் தருவிக்கும் இயற்கை வளங்களில் மண்மணக்கும் கம்பங்கூழுக்கு தனி இடம் உண்டு! குறிப்பாக கோடைக்காலத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களிலும், நீர்மோர்ப் பந்தல்களிலும், திருமண
விருந்துகளிலும் கம்பு இன்றியமையாத ஒன்றாய் இருக்கிறது.
வெப்பம், குளிர்ச்சி, தாகத் தணிப்பு இவையனைத்தையும் தாண்டி, ‘கம்பு சாப்பிட்டா வம்பு ஏது?’ என்று அந்நாட்களில் வீட்டுப் பெரியவர்களும், ‘வாரம் ஒருமுறையேனும் கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களை உணவில் சேர்த்திடுங்கள்…’ என சமீபமாக உலக சுகாதார அமைப்பும் கூறிவருவதன் காரணங்களையும், கம்பின் வரலாற்றையும் இன்றைய இயற்கை 360° பயணத்தில் தெரிந்துகொள்ள ‘கம்பு’டன் பயணிப்போம் வாருங்கள்..!உலகிலேயே சோளத்திற்கு அடுத்ததாக பெருமளவு பயன்படுத்தப்படும் சிறுதானியமான கம்பு என்ற முத்துத்தினையின் தாவரப்பெயர் Pennisetum glaucum.
இது தோன்றிய இடம் மத்திய ஆப்ரிக்கா என்றாலும், கம்பு உற்பத்தியில் முன்னிற்பது இந்தியாதான். ராஜஸ்தான், குஜராத், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கம்பு அதிகமாக பயிரிடப்படுவதுடன், கம்பு ஏற்றமதியில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. மண் வளம் குறைந்த நிலங்களிலும், நீர் வறட்சிப் பகுதிகளிலும், பாறை மற்றும் கரிசல் மண் பரப்புகளிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது கம்பு. பாஜ்ரா, பாஜ்ரி, சஜ்ஜை, சஜ்ஜூலூ என பல்வேறு மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் சிறுதானிய வகையான கம்பு, சின்னஞ்சிறு முத்துகளை ஒத்த தோற்றம் கொண்டதால் ‘Pearl Millet’ என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.
வெண்மை கலந்த பச்சை, பழுப்பு அல்லது மஞ்சள், லேசான வயலெட் அல்லது சாம்பல் நிறத்திலும் காணப்படும் கம்பு மண்மணத்துடன் சிறிது கசப்பும் இனிப்பும் கலந்ததொரு சுவை கொண்டது. கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்பட்டு வந்த இந்த வறட்சிப் பயிர், வளரும் நாடுகளில் பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்ட போது மனிதனின் பிரதான உணவாக மாறி, வெகு சமீபத்தில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறுதானிய உணவாகவும் மாறியுள்ளது.
சிறுதானிய உணவுகளில் பிரதான உணவாக கம்பு பயன்படுத்தப்படுவதின் ரகசியம் அதனிடமே உள்ளது என்றுகூறும் ஊட்டச்சத்து நிபுணர்கள், எந்தவொரு முக்கிய உணவும் வழங்கும் கலோரிகளை கம்பு மிக எளிதில் பூர்த்தி செய்கிறது என்கின்றனர்.கம்பில் 361/100 கிராம் அளவில் கலோரி இருந்தாலும், கலோரிக்கு காரணமான மாவுச்சத்தில் பெரும்பங்கு (70%) வகிப்பது ‘Complex Carbohydrates’ எனப்படும் சிக்கலான, எளிதில் செரிமானமாகாத கார்போஹைட்ரேட்டுகள்தான் என்பது இதன் தனிச்சிறப்பு.
அத்துடன் அதிக நார்ச்சத்து, அதிக நீர்த்தன்மை, கூடுதல் புரதச்சத்து மற்றும் வைட்டமின்கள் E,K, தையமின்(thiamine), நியாசின்(niacin), ரிபோஃபிளாவின் (riboflavin) உள்ளிட்ட B complex வைட்டமின்கள், இவற்றுடன் இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிமச் சத்துகள் மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் என பற்பல தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது.இதில் காணப்படும் மெத்தியோனின் (Methionine), லைசின் (Lysine), சிஸ்டின் (Cystine), டிரிப்டோபான் (Tryptophan) உள்ளிட்ட அத்தியாவசிய அமினோ அமிலங்களும், ஃபீனாலிக் அமிலம், ஃபைடிக் அமிலம், லெசித்தின், லிக்னான்கள், டானின்கள் மற்றும் ஃப்ளேவனாயிடுகள் உள்ளிட்ட தாவரச்சத்துகளும் சேர்ந்து, பல்வேறு மருத்துவ குணங்களுக்கும் காரணமாகவும் இருக்கிறது.
சர்க்கரை நோய்க்கான முக்கிய உணவாக கம்பு பரிந்துரைக்கப்படக் காரணம், கம்பில் உள்ள அதிக நார்ச்சத்தும், எளிதில் செரிமானமாகாத காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டும் ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாய் கூட்டுவதில்லை. மேலும் இவை உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதுடன் வயிற்று அழற்சி, மலச்சிக்கல், நாட்பட்ட பெருங்குடல் நோய்கள், மூல நோய்க்கும் பயன் அளிக்கின்றது. Gluten அறவே இல்லாத தானியங்களுள் கம்பும் ஒன்று என்பதால் சிலியாக் நோயின் பாதிப்புகளையும் பெரிதும் குறைக்கிறது.
பித்தப்பையில் கற்கள் தோன்றுவதைக் குறைக்கும் ஆற்றல் உடைய கம்பு, சிறந்த சிறுநீர்ப் போக்கியாகவும், சிறுநீர்த்தொற்று, சிறுநீரகக் கற்கள் ஆகியவற்றின் அறிகுறிகளை மட்டுப்படுத்தவும் உதவுகிறது. அழற்சி எதிர்ப்புத்தன்மை கொண்ட இதன் தாவரச்சத்து, இதய நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் போன்றவற்றை கட்டுப்படுத்துவதுடன், இதன் கனிமச்சத்துகள் தூக்கமின்மை, மன அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, அல்சைமர், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றின் நோய்த்தாக்கத்தைக் குறைக்கவும் உதவும்.
தாகத்தைக் குறைத்து, கோடைக்கால சூட்டைத் தணிப்பதோடு, உடலுக்குத் தேவையான ஆற்றலையும், எலும்பு மற்றும் தசைகளுக்கு வலிமையையும் சேர்ப்பதால், குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறந்த உணவுத்தேர்வாகவும், குழந்தைகளின் அலர்ஜி, ஆஸ்துமா ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பும் அளிக்கிறது. இதன் நுண்ணூட்டங்கள் சருமம், முடி மற்றும் நகங்களின் ஆரோக்கியத்தை செம்மைப்படுத்துகின்றன.
பல்வேறு மருத்துவ குணங்கள் கம்பு சிறுதானியத்தில் இருந்தாலும், ஒவ்வாமையால் இருமல், மூச்சிரைப்பு, வாந்தி, மயக்க அறிகுறிகளும் சிலருக்கு ஏற்படலாம். யூரிக் அமிலத்தை அதிகரிக்க செய்து, சிறுநீரகக் கற்களை உருவாக்குவதோடு, கௌட்(Gout) மூட்டு நோயில் மீள்நிகழல் (relapses) ஏற்படும் என்பதால், இந்த பாதிப்பு உள்ளவர்கள் தவிர்ப்பதே நல்லது என்கின்றது மருத்துவ உலகம்.
மகாங்கு(Mahangu) என நைஜீரியா மற்றும் நமீபியாவில் அழைக்கப்படும் கம்பு, ஃப்யூரா(Fura), ஓஷிஃபீமா(Oshifima) என்ற பெயர்களுடன் பாலில் கலந்து பானமாகவும், ரொட்டி மற்றும் பாரிட்ஜாகவும் உட்கொள்ளப்படுகிறது என்றாலும், இன்றளவும் ஏழைகளின் உணவாகவே கருதப்படுகிறது.ஆக,‘கம்பு சாப்பிட்டா வம்பு ஏது?’ என்று அந்நாட்களில் வீட்டுப்பெரியவர்களும், ‘வாரம் ஒருமுறையேனும் கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களை உணவில் சேருங்கள்… வாழ்க்கை முறை சார்ந்த (NCD) நோய்களைத் தவிர்த்திடுங்கள்…’ என உலக சுகாதார அமைப்பும் கூறுவதன் காரணங்களை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
இவையனைத்தையும் தாண்டி, உங்களது உணவில் இன்று கம்பு உள்ளதெனில் ஆரோக்கியமான, வலிமையான, இனிமையான நாள் உங்களுக்கு நிச்சயம் அமையும் என்பதைச் சொல்லாமல்
சொல்லிச் செல்கிறது ஏழைகளின் எளிய உணவான கம்பு..!
(இயற்கைப் பயணம் நீளும்!)
டாக்டர்: சசித்ரா தாமோதரன்
மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்
The post இயற்கை 360° – கம்பு சாப்பிட்டா வம்பு ஏது? appeared first on Dinakaran.