புதுடெல்லி: இமாச்சல் மாநில காங்கிரஸ் கட்சியை கூண்டோடு கலைத்து கட்சித்தலைவர் கார்கே அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இமாச்சல் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக சுக்வீந்தர்சிங் சுக்கு உள்ளார். மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் முதல்வர் வீரபத்ரசிங் மனைவி பிரதீபா சிங் உள்ளார். பிரதீபா சிங்கும், அவரது மகன் விக்ரமாதித்யாவும் இணைந்து முதல்வர் சுக்வீந்தர்சிங் சுக்குவிற்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வந்தனர். இதனால் இமாச்சல் காங்கிரஸ் இரண்டாக பிரிந்தது. இந்த சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி ஓட்டு போட்டதால் காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் சிங்வி தோற்றார். பா.ஜ வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றார்.
இது காங்கிரஸ் தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் இமாச்சல் மாநில காங்கிரஸ் கட்சியை நேற்று அதிரடியாக கலைத்து கட்சித்தலைவர் கார்கே உத்தரவிட்டுள்ளார். இமாச்சல் காங்கிரஸ் கட்சியை மறுகட்டமைக்க வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.
The post இமாச்சல் காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு appeared first on Dinakaran.