
சிம்லா,
இமாசல பிரதேச மாநிலத்தில் கடந்த 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 75.3 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 67.7 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகக்கூடிய சூழலில், தற்போது 11 சதவீதம் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், இமாசல பிரதேசத்தில் உள்ள உயரமான பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சண்டிகரில் உள்ள புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இமாசல பிரதேசத்தின் சம்பா பகுதி (2,850 மீட்டர் உயரத்திற்கு மேல்) மற்றும் லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி பகுதிகளில் (2,900 மீட்டர் உயரத்திற்கு மேல்) பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கை (பாதுகாப்பற்ற நிலை) விடுக்கப்பட்டுள்ளது.
அதே போல், குல்லு மற்றும் கின்னோர் பகுதிகளுக்கு (2,900 மீட்டர் உயரத்திற்க்கு மேல்) மஞ்சள் எச்சரிக்கை (ஓரளவு பாதுகாப்பற்ற நிலை) மற்றும் சிம்லா மாவட்டத்திற்கு பச்சை எச்சரிக்கை (உறுதியற்ற தன்மை) விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.