புதுடெல்லி: இமயமலையில் 1968ல் விமானம் விழுந்து நொறுங்கியதில் பலியான 4 வீரர்கள் சடலம் 56 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீட்கப்பட்டது. 1968ம் ஆண்டு பிப்.7ம் தேதி விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் 12 ரக இரட்டை எஞ்சின் விமானம் 102 பேரை ஏற்றிக்கொண்டு சண்டிகரில் இருந்து காஷ்மீர் மாநிலம் லே பகுதிக்கு சென்றது. இமாச்சல் மாநிலம் இமயமலை பகுதியில் உள்ள ரோஹ்தாங் கணவாய் பகுதியில் விமானம் சென்ற போது திடீரென விழுந்து நொறுங்கியது. பனிக்கட்டி படர்ந்த அந்த பகுதியில் விமானம் விழுந்ததால் அதில் சென்ற 102 பேரின் சடலங்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இருப்பினும் சடலங்களை மீட்க முடியவில்லை.
2003ம் ஆண்டு மலையேறும் நிபுணர்கள் விமானத்தின் இடிபாடுகளை கண்டுபிடித்தனர். அதை தொடர்ந்து சடலங்களை தேடும் பணி விமானப்படை மற்றும் டோக்ரா சாரணர்கள் சார்பில் முடுக்கி விடப்பட்டது. 2019ல் அந்த பகுதியில் இருந்து 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. தற்போது இந்திய ராணுவத்தின் டோக்ரா சாரணர்கள் மற்றும் திரங்கா மலை மீட்பு பணியாளர்கள் குழுவினர் சந்திரபாகா மலைப்பயணத்தின் போது மேலும் 4 வீரர்களின் சடலங்களை மீட்டுள்ளனர். அவர்கள் மல்கான் சிங், சிப்பாய் நாராயண் சிங், தாமஸ் சரண் என்பது தெரியவந்துள்ளது. இதில் தாமஸ் சரண், கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டம் எலந்தூரைச் சேர்ந்தவர். அவரது தாயார் எலியாமாவிடம் தாமஸ் சரண் உடல் மீட்கப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ ஆவணங்களின் உதவியுடன் மல்கான் சிங்கின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது. ராணுவ மருத்துவப் படையில் பணியாற்றிய சிப்பாய் சிங்கும், அதே போல் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டார். அவர் உத்தரகாண்டின் கர்வாலில் உள்ள சாமோலி தாலுகாவின் கோல்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்திய விமானப் படையின் ஏஎன்-12 விமானம் விழுந்து நொறுங்கி 56 ஆண்டுகளுக்கு பிறகுமேலும் நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்க வெற்றியைக் குறிக்கிறது. இந்தியாவின் மிக நீண்ட தேடுதல் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post இமயமலையில் நொறுங்கிய விமானம் 56 ஆண்டுகளுக்குப் பின் 4 வீரர்கள் சடலம் மீட்பு appeared first on Dinakaran.