![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/03/37258660-gamabi.webp)
மும்பை,
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா அபிஷேக் சர்மாவின் அதிரடி சதத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 135 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 248 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து வெறும் 10.3 ஓவர்களில் 97 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் 4 போட்டிகளின் முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த தொடரில் தாங்கள் அடைந்த வெற்றி குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் பேசுகையில், "இங்கிலாந்து அணி திறமை வாய்ந்த வீரர்களைக் கொண்ட ஒரு அணியாகும். அவர்களுக்கு எதிராக ஒரு போட்டியில் தோற்றதற்கு எல்லாம் நாங்கள் பயப்படவில்லை. நாங்கள் பேட்டிங் செய்யும்போது 250 முதல் 260 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். இப்படி நினைத்து அதிரடியாக விளையாடும்போது சில போட்டிகளில் 120 ரன்களில் ஆட்டம் இழக்க கூடும். அதைப்பற்றி கவலை கொள்ளக்கூடாது. நாங்கள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கின்றோம். இதே ஸ்டைலில்தான் எதிர்காலத்திலும் விளையாட போகிறோம்.
அபிஷேக் ஷர்மா போன்ற இளம் வீரர்களுக்கு நாங்கள் அதிகம் ஆதரவு அளிக்க போகிறோம். சில சமயம் இப்படி அதிரடி காட்டும் வீரர்களிடம் நாம் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். ஏனென்றால் பயமின்றி கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற வழியில் இந்த இளம் வீரர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். மணிக்கு 140 முதல் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு இப்படி ஒரு சதத்தை எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் அடித்து நான் பார்த்ததில்லை.
ஐ.பி.எல். தொடரில் இந்த வீரர்களை நமது இளம் வீரர்கள் அதிக முறை எதிர்கொண்டு இருக்கிறார்கள். இதுதான் இனி இந்திய கிரிக்கெட். முடிவுகள் நமக்கு சாதகமாக இருக்கும்போது அனைத்தும் நல்ல விஷயமாக இருக்கும். 140 கோடி இந்திய மக்களுக்காக நாங்கள் விளையாடுகிறோம் என்பதை எங்களுடைய வீரர்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். வருண் சக்கரவர்த்தியும், ரவி பிஸ்னாயும் எங்கள் பந்துவீச்சின் மிகவும் முக்கியமானவர்கள். இருவரும் கூட்டணி அமைத்துக் கொண்டு பந்து வீசுவது எங்களுக்கு மிகவும் முக்கியமாகும்.
பேட்டிங்கில் நாங்கள் முடிந்த அளவுக்கு அதிரடியாக விளையாட போகிறோம். இன்றைய ஆட்டத்தில் துபே நான்கு ஓவர்களை வீசினார். எங்கள் அணியின் பேட்டிங் வரிசையில் தொடக்க வீரர்களை தவிர எஞ்சிய அனைத்து வீரர்களின் பேட்டிங் வரிசையும் மாறிக்கொண்டே இருக்கும். இனி டி20 கிரிக்கெட் இப்படித்தான் விளையாடப்படும். ஒருநாள் கிரிக்கெட்டிலும் இதேபோன்று ஆக்ரோஷமான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்த முயற்சி செய்வோம். ரசிகர்களுக்கு பொழுதுபோக்கை நாங்கள் நிச்சயம் கொடுப்போம்" என்று கூறினார்.