இன்று மாலையுடன் ஓய்கிறது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை

1 week ago 4

ஈரோடு,

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் மறைந்தார். இதனால் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட திருமகன் ஈவெராவின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார். ஆனால், உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதால், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (பிப்., 5-ம் தேதி) தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தி.மு.க. சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனிடையே, இன்று முதல், வாக்குப்பதிவு தினமான புதன்கிழமை வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக வந்துள்ள வெளி நபர்கள் இன்று மாலைக்குள் வெளியேற வேண்டும் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. இதையொட்டி இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை, வேட்பாளர்கள், இதர அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டிய பின்வரும் விதிமுறைகள் செயல்பாட்டில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

மேலும் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு நாளில் 'பூத்'களை அமைப்பது, வாகனங்களை பயன்படுத்துவது, நடத்தை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தால் சில வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் இன்று மாலை 6 மணி முதல் எந்த விதத்திலும் பிரசாரம் செய்யக்கூடாது.

ஈரோடு கிழக்கு தொகுதி மக்களைத்தவிர, பிரசாரத்துக்காக வெளியில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் இன்று மாலைக்குள் உடனே தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். வேட்பாளர்களுக்கு ஏற்கனவே பிரசாரத்துக்காக வழங்கப்பட்ட வாகன அனுமதிகள் இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது. வேட்பாளர்களோ அல்லது அரசியல் கட்சியினரோ, வாக்காளர்களை வாகனம் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு ஏற்றி வருதல் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

வேட்பாளர்கள் வாக்குச்சாவடி அமைந்துள்ள வளாகத்தில் இருந்து 200 மீட்டருக்கு வெளியே மட்டுமே தற்காலிக 'பூத்' அமைக்க வேண்டும். ஒரே வாக்குச்சாவடி மையத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைந்திருந்தாலும், ஒரு வேட்பாளருக்கு ஒரு 'பூத்' மட்டுமே இருக்க வேண்டும். தேர்தல் 'பூத்' அமைக்க விரும்பும் வேட்பாளர்கள், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம், பெயர், வாக்குச்சாவடி வரிசை எண் போன்ற விவரங்களுடன் மனு அளித்து அனுமதி பெற வேண்டும்.

பொதுச்சொத்து, தனியார் இடங்களில் எந்த வித ஆக்கிரமிப்பு செய்து 'பூத்' அமைக்கக்கூடாது. 'பூத்' அமைக்கும் போது அதற்கான செலவினங்கள் மற்றும் அதில் உள்ள நபர்களின் செலவினங்கள் அனைத்தும் வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும்.

தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பார்வையாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் போலீஸ்துறை அதிகாரிகளை தவிர வேறு யாரும், வாக்குச்சாவடிகளின் 100 மீட்டர் சுற்றளவில் செல்போன்கள், வயர்லெஸ் பெட்டிகள் போன்றவற்றை எடுத்துச்செல்லவோ, பயன்படுத்தவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். வேட்பாளர்களால் தேர்தல் 'பூத்'களில் பணியாற்ற பரிந்துரைக்கப்படும் நபர், அதே வாக்குச்சாவடியில் வாக்காளராக இருக்கவேண்டும். அவர், வாக்காளர் அடையாள அட்டையினை வைத்திருக்க வேண்டும். வேட்பாளர்கள் தேர்தல் நாளன்று அனுமதி பெற்று 3 வாகனங்கள் பயன்படுத்தலாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளநிலையில், 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Read Entire Article