இன்று நாம் பார்க்கும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுக ஆட்சிதான்; விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

1 week ago 2

கோவை: கோவையில் ரூ300 கோடியில் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘இன்றைக்கு நாம் பார்க்கும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுக ஆட்சிதான். விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம்’ என்று தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் சார்பில் நிறைவேற்றப்படும் மக்கள் நலத்திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைகிறதா? என்பதை கள ஆய்வை செய்யவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் கோவை சென்றார்.

அதன்படி, மாவட்டம் வாரியாக கள ஆய்வை நேற்று முன்தினம் கோவையில் தொடங்கினார். அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம், பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள், தங்க நகைப்பட்டறைகளில் தொழிலாளர்களுடன் சந்திப்பு, சிட்கோ தொழிற்பேட்டை தொழிலாளர் விடுதி கட்டுமான பணிகள் ஆய்வு மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டத்திற்கான நிலமெடுத்தல் நடவடிக்கைகள் திரும்ப பெறப்பட்டதால் 468.89 ஏக்கர் நிலங்களுக்கு விலக்களித்து, அதற்கான விடுவிப்பு ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு வழங்கினார். மேலும் கோவை விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் ரூ158.32 கோடியில் கட்டப்பட்ட தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முதல்நாளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். 2ம் நாளான நேற்று காலை 9.30 மணிக்கு கோவை காந்திபுரத்தில் ரூ133.21 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் செம்மொழி பூங்கா கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் அருகே மத்திய சிறைக்கு சொந்தமான 6.9 ஏக்கர் காலியிடத்தில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில், ரூ300 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் சேர்த்து 8 தளங்களுடன் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ள பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கோவை மாவட்டத்திற்கு அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த ‘கம்பேக்’ கொடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

அவரின் சிறப்பான, வேகமான செயல்பாடுகளை பார்த்து, நடுவில் சில தடைகளை ஏற்படுத்தினார்கள். அந்த தடைகளையெல்லாம் உடைத்து, மீண்டும் வந்திருக்கிறார். தொடர்ந்து கோவைக்காக சிறப்பாக செயல்படுவார். கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தினோம். அதன் நினைவாகத்தான், மதுரையில் மாபெரும் நூலகத்தை அமைத்தேன். தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் அதைப் பயன்படுத்தி பயனடைந்து வருகின்றனர். அதேபோல கோவையிலும் ஒரு நூலகம் கலைஞர் பெயரால் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வந்தது. கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்று நான் அறிவித்தேன். அடுத்து வந்த ஆலோசனையில் நூலகத்துடன் சேர்த்து, அறிவியல் மையமும் அமைக்கலாம் என்று கருத்துகள் வந்தவுடன், எனக்கு நினைவில் வந்தவர் தந்தை பெரியார். சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளது.

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளது. எனவே கோவையில், இரண்டு பேரையும் உருவாக்கிய தந்தை பெரியார் பெயரில் நூலகமும், அறிவியல் மையமும் அமைவது தான் பொருத்தமாக இருக்கும். 80 ஆண்டுகளுக்கு முன்பே, இனி வரும் உலகம் எப்படி இருக்கும் என்று கனவு கண்ட, பகுத்தறிவு ஆசான். இன்றைய இளைய சமுதாயம் வளர, வாழ தந்தை பெரியார் நூலகமும், அறிவியல் மையமும் கோவையில் கம்பீரமாக சிறப்பாக அமைய உள்ளது. 2026ம் ஆண்டு ஜனவரி மாதம், இந்த நூலகம் திறக்கப்படும். திராவிட மாடல் அரசை பொறுத்தவரை, சொன்னால், சொன்னதை செய்வோம். ஒவ்வொரு தனிமனிதனின் கவலையையும் போக்கும் அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலைவிட நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் செல்வாக்கு அதிகமாகி இருக்கிறது.

இதுதான் பலரும் நம்மை விமர்சிக்க காரணம். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், மக்களுக்கான எங்களின் பணியை தொடர்ந்து செய்துகொண்டுதான் இருப்போம். இன்றைக்கு நாம் பார்க்கும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுக ஆட்சிதான். எங்களுக்கு ஒரு விஷன் இருக்கிறது. அதை செயல்படுத்துவதற்கான மிஷன்தான் ஆட்சி அதிகாரம். 50 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு வடமாநிலமும், தமிழ்நாடும் எப்படி இருந்தது. ஆனால் இன்றைக்கு, அதே வடமாநிலத்துடன் தமிழ்நாட்டை ஒப்பீடு செய்து பார்த்தால் உங்களுக்கே அது புரியும். தமிழ்நாடு இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமாகும். இந்தியாவிலேயே அதிக நகரமயமான மாநிலம். ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் முதல் மாநிலம். இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில், கிட்டத்தட்ட 20 விழுக்காடு தமிழ்நாட்டில்தான் இருக்கிறது.

தொழிற்சாலைகளில் மொத்த பதிவு குறியீட்டில் 48 விழுக்காடு மேற்கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். தெற்கு ஆசியாவிலேயே சுற்றுலா மேற்கொள்வதில் முன்னணி மாநிலம் தமிழ்நாடு. வறுமையின்மை, பட்டினி ஒழிப்பு, தரமான கல்வி, பாலின சமத்துவம், தூய்மையான குடிநீர், குறைந்த விலைவாசி, வேலைவாய்ப்பு, பொருளாதார குறியீடு, தொழில் உள்கட்டமைப்பு, மருத்துவம், மக்கள் நல்வாழ்வு, நுகர்வு, உற்பத்தி என்று எந்த புள்ளிவிவரத்தை எடுத்துக்கொண்டாலும் தமிழ்நாடுதான் முன்னணி மாநிலமாக இருக்கிறது. இவையெல்லாம் சாதாரணமாக நடந்துவிடவில்லை. கொள்கையும் லட்சியமும் கொண்டு அதை அடைவதற்கான தொலைநோக்கு பார்வையும், செயல்திட்டமும் கொண்ட மக்களுக்கான அரசை நடத்திய காரணத்தால்தான் இது சாத்தியமானது. அண்ணா அன்றைக்கு “வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது!” என்று கூறினார்.

ஆனால், இன்றைக்கு தெற்கை நாங்கள் வளர்த்திருக்கிறோம். இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்லவேண்டுமென்றால், தெற்குதான், வடக்கிற்கும் இன்றைக்கு வாரி வழங்குகிறது. அதுதான் உண்மை நிலை. இதை யாரும் மறுக்க முடியாது. என்னை பொறுத்த வரையில் கோட்டையில் அமர்ந்துகொண்டு ஆட்சி நடத்துபவனாக இல்லாமல், களத்திலிருந்து பணியாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளும் கடமையும் ஏராளம் இருக்கிறது. அதற்கு எப்போதும் உங்களின் ஆதரவு எங்களுக்கு வேண்டும். நீங்கள் வழங்குகின்ற உற்சாகமும், ஆதரவும்தான் எங்களை இன்னும் வேகமாக வேலை செய்ய தூண்டுகிறது. உங்களுக்காக, உங்களில் ஒருவனாக என்றும் நான் இருப்பேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், செந்தில்பாலாஜி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, வானதி சீனிவாசன் எம்எல்ஏ, தலைமை செயலாளர் முருகானந்தம், கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம்சர்மா, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் மதுமதி, பொது நூலக இயக்குநர் (பொ) சங்கர், கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கல்லூரி மாணவர்களிடம் நலம் விசாரித்த முதல்வர்
கோவை காந்திபுரத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிரமாண்ட நூலகம் மற்றும் அறிவியல் மையம் அடிக்கல் நாட்டு விழாவில், அரசு, தனியார் கல்லூரியை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் குவிந்து இருந்தனர். விழா மேடைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்த போது அவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், முதல்வர் மாணவர்களை பார்த்து நல்லா இருக்கீங்களா? என்று விசாரித்து தனது உரையை துவக்கினார். இதற்கும் மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

* இன்றைக்கு நாம் பார்க்கும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுக ஆட்சிதான்.
* 50 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு வட மாநிலமும், தமிழ்நாடும் எப்படி இருந்தது.
* இன்றைக்கு, அதே வடமாநிலத்துடன் தமிழ்நாட்டை ஒப்பீடு செய்து பார்த்தால் உங்களுக்கே அது புரியும்.
* தமிழ்நாடு இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமாகும்.

* இந்தியாவிலேயே அதிக நகரமயமான மாநிலம். ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் முதல் மாநிலம்.
* இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில், கிட்டத்தட்ட 20 விழுக்காடு தமிழ்நாட்டில்தான் இருக்கிறது.
* தொழிற்சாலைகளில் மொத்த பதிவு குறியீட்டில் 48 விழுக்காடு மேற்கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான்.
* தெற்கு ஆசியாவிலேயே சுற்றுலா மேற்கொள்வதில் முன்னணி மாநிலம் தமிழ்நாடு.

The post இன்று நாம் பார்க்கும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுக ஆட்சிதான்; விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article