இன்று தேசிய தன்னார்வ ரத்ததான தினம்; ரத்ததானம் செய்பவர்களை உளமார பாராட்டுகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி

2 months ago 21

சென்னை: தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி:
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்ததான தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டிற்கான தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தின் கருப்பொருள் “ரத்த நன்கொடையின் 20ம் ஆண்டு கொண்டாட்டம். ரத்தக் கொடையாளர் அனைவருக்கும் நன்றிகள்” என்பதாகும். ரத்தம் என்பது நம் உடலில் ஓடக்கூடிய உயிர்காக்கும் திரவமாகும். நம் நுரையீரலில் இருந்து நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜனை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதோடு, உடலிலுள்ள கழிவு பொருட்களையும் வெளியேற்றுகிறது. நம் ஒவ்வொருவரின் உடலிலும் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. ரத்ததானம் செய்ய 20 நிமிடங்கள்தான் ஆகும். இந்த ரத்ததானத்தின்போது 350 மி.லி ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண் 3 மாதத்திற்கு ஒரு முறையும், பெண் 4 மாதத்திற்கு ஒரு முறையும் ரத்ததானம் செய்யலாம்.

தானமாக பெறப்படும் ஓர் அலகு ரத்தம் 4 உயிர்களை காப்பாற்றும். ரத்ததானம் செய்தால் உடலில் புதிய செல்கள் உருவாகி தானம் செய்வோரின் உடல் நலனும் காக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் எடுத்துரைக்கிறார்கள். எனவே, அடுத்தவர் உயிர்காக்கும் ரத்ததானத்தை தவறாது செய்வோம். தமிழ்நாட்டில் இதற்கென 107 அரசு ரத்த மையங்களும், 247 தனியார் ரத்த மையங்களும் செயல்பட்டு வருகின்றன. ரத்த மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக e-RaktKosh என்ற வலைத்தளம் செயல்பாட்டில் உள்ளது. இத்தளத்தில் ரத்ததான முகாம் மற்றும் ரத்த கொடையாளர்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம், அதில் ரத்த வகைகளின் இருப்பை தெரிந்து கொள்ளும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் இத்தளத்தை பயன்படுத்தி தங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் எளிதில் ரத்தம் பெற்றுக் கொள்ளலாம். ஆண்டுதோறும் தமிழ் நாடு அரசு ரத்த கொடையாளர்கள் மற்றும் ரத்ததான முகாம் அமைப்பாளர்களை அரசு சார்பில் பாராட்டி சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கிச் சிறப்பித்து வருகிறது. கடந்த ஆண்டு அரசு ரத்த மையங்கள் வாயிலாக, இலக்கிற்கு மேல் 102 சதவீதம் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் ரத்தமானது அரசு மருத்துவமனைகளில் தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும்போது இனம், மதம், மொழி பாகுபாடின்றி வாழ்வளிக்க மனித நேயத்தோடு தன்னார்வ ரத்ததானம் செய்திட முன்வருபவர்களை உளமார பாராட்டுகிறேன். மேலும், மக்களின் உயிர்காக்கும் சேவையில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். ரத்ததானம் செய்வோம், உயிர்களை காப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post இன்று தேசிய தன்னார்வ ரத்ததான தினம்; ரத்ததானம் செய்பவர்களை உளமார பாராட்டுகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி appeared first on Dinakaran.

Read Entire Article