இன்னும் 5 விக்கெட்டுகள்தான்.. டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைக்க உள்ள அர்ஷ்தீப் சிங்

2 hours ago 1

செஞ்சூரியன்,

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் 3-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 107 ரன்களும், அபிஷேக் சர்மா 50 ரன்களும் அடித்தனர்.

இதனையடுத்து 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்தியா 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 54 ரன்கள் அடித்து வெற்றிக்கு போராடினார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அர்ஷ்தீப் சிங் இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 92 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்து வீச்சாளர்கள் வரிசையில் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் இன்னும் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினால் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைப்பார். இந்த பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் 96 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

அந்த பட்டியல்:-

1. சாஹல் - 96 விக்கெட்டுகள்

2. அர்ஷ்தீப் சிங் - 92 விக்கெட்டுகள்

3. புவனேஸ்வர் குமார் - 90 விக்கெட்டுகள்

4. பும்ரா - 89 விக்கெட்டுகள்

Read Entire Article