
மும்பை,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 19 லீக் ஆட்டங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
இந்த நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி 17 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராக புதிய சாதனையை படைத்து விடுவார். அதாவது விராட் கோலி டி20 கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 12 ஆயிரத்து 983 ரன்கள் குவித்துள்ளார். இவற்றில் 9 சதங்களும், 98 அரை சதங்களும் அடங்கும்.
இன்று நடைபெறும் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் விராட் 17 ரன் எடுக்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார். இந்த பட்டியலில் உலக அளவில் வெஸ்ட் இண்டிஸை சேர்ந்த கிறிஸ் கெய்ல் (14,562 ரன்) முதல் இடத்தில் உள்ளார்.
இந்தப்பட்டியலில் இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் (13,610 ரன்) 2வது இடத்திலும், பாகிஸ்தானின் சோயப் மாலிக் (13,557 ரன்) 3வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் கைரன் பொல்லார்டு (13, 537 ரன்) 4வது இடத்திலும் உள்ளனர். விராட் கோலி 5வது இடத்தில் உள்ளார்.