இனிய இல்லறம் மலர விட்டுக்கொடுப்போம்!

2 hours ago 3

ஒரு தம்பதியருக்கு மணமேடையில் திருமணம் நடந்து முடிந்திருந்தது. இருவரும் மேடையில் அமர்ந்திருக்கையில் அந்தப் பக்கமாக ஒரு எலி ஓடியது. அதைப் பார்த்த மாப்பிள்ளை பெண்ணிடம் ‘‘அந்த பக்கமாக எலி ஓடியதைப் பார்த்தாயா?’’ எனக் கேட்டார். அதற்கு மணப்பெண் ‘‘எலி ஓடியது, ஆனால் அந்தப்பக்கமாக ஓடவில்லை இந்தப் பக்கமாக ஓடியது’’ என்றாள். அவன் அந்தபக்கம் எனச் சொல்ல இவள் இந்தப்பக்கம் எனச்சொல்ல இது வாக்குவாதமாக மாறி விவாகரத்தில் முடிந்ததாம்.

இறைமக்களே, விட்டுக் கொடுத்தல் இல்லையென்றால் பிரிவினையே மிஞ்சும் என்பதையும், வாக்குவாதங்கள் என்றும் தீர்வுகளை கொண்டுவருவது இல்லை என்பதையும் இச்சிறு கதை நமக்கு விளக்குகிறது. விட்டுக் கொடுப்பதால் நாம் தோல்வியடைந்து விட்டோம்; நாம் நினைத்தது கிடைக்காது, அதனால் கஷ்டம் ஏற்படும் என்று நினைப்பது தவறு. விட்டுக் கொடுக்கும்போதுதான் இயல்பாக கிடைப்பதைவிட அதிகமாகப் பெறுகிறோம். நமக்குத் தேவையானவற்றை பெறுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி பெரியது. நம்மைச் சேர்ந்தவர்களின் தேவைக்காக, நமது தேவையை விட்டுக்கொடுப்பதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி அதைவிடப் பெரியது. ‘விட்டுக்கொடுத்தல்’ என்பது மகிழ்ச்சி மற்றும் அன்பு பகிர்தலின் ஊடகமாக விளங்குகிறது.

‘விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை’ என்று பழமொழி உண்டு. தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், வாழ்க்கைத் துணை, உடன் பணியாளர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரிடமும் விட்டுக் கொடுத்துப் போவது ஆரோக்கியமான உறவைத் தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது. ஆகையால், மகிழ்ச்சியில் உறவுகள், நட்புகள் மலர, விட்டுக்கொடுத்து ஆனந்தமாய் வாழ்ந்திடுவோம்.

நமது ஆண்டவர் ஆதி.2:24ல் இசைந்து வாழும்படி அழைப்பைக் கொடுக்கிறார். எல்லாவற்றிலேயும், எல்லா சூழ்நிலைகளிலும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து வாழ வேண்டும் (கொலோ 3:18) எனவும், தீமைக்குத் தீமையையும், உதாசீனத்திற்கு உதாசீனத்தையும் செய்யக் கூடாது (1 பேதுரு 3:9) எனவும் அறிவுரை கூறுகிறார். ஆகவே, இனிய இல்லறம் மலர வாக்குவாதங்களைத் தவிர்த்து, விட்டுக் கொடுத்து வாழ்வதில் தான் இருக்கிறது.

– அருள்முனைவர். பெ. பெவிஸ்டன்.

The post இனிய இல்லறம் மலர விட்டுக்கொடுப்போம்! appeared first on Dinakaran.

Read Entire Article