இனி மக்களின் சேமிப்பு உயரும்

3 months ago 11

கடந்த 1-ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டை பிரதமர் நரேந்திர மோடி 'மக்கள் பட்ஜெட்' என்று வர்ணித்துள்ளார். எல்லா இந்திய மக்களின் கனவுகளையும் இந்த பட்ஜெட் நனவாக்குவதோடு மட்டுமல்லாமல் நுகர்வு, முதலீடு மற்றும் சேமிப்பை ஊக்குவிக்கும் உந்து சக்தியாக இருக்கிறது. பொதுவாக பட்ஜெட்டுகள் அரசாங்கத்தின் கஜானாவை நிரப்புவதில் கவனம் செலுத்துவதாக இருக்கும். ஆனால் இந்த பட்ஜெட் மக்களின் பைகளில் நிறைய பணத்தை போடும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் மக்களின் சேமிப்புகளை அதிகமாக்கும்.

நாட்டின் வளர்ச்சி பாதையில் மக்களை பங்குதாரர்களாக்கும் இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கான வழியில் ஒரு முக்கிய மைல் கல்லாக இருக்கிறது. 'பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள வரி நிவாரணம் நடுத்தர மக்களுக்கும், மாத சம்பளம் பெறுபவர்களுக்கும் பெரிய பலனை கொடுத்துள்ளது' என்று கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள் இனி வருமான வரி கட்டவேண்டியதில்லை, புதிதாக வேலைக்கு சேருபவர்களுக்கும் இது பெரிய வாய்ப்புகளாக அமைந்துள்ளது என்று பெருமிதத்தோடு கூறினார்.

இந்த வரி விகிதம் ரூ.12 லட்சம் என்று கூறினாலும், இந்த பலன் ரூ.12 லட்சத்து 75 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கும் பொருந்தும். அதுபோல ரூ.12 லட்சத்துக்கு அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களுக்கும் பலன் அளிக்கிறது. இந்த வரி சலுகையால் 6 கோடி பேர் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுவார்கள் என்றும், மேலும் ஒரு கோடி பேருக்கு வருமான வரி செலுத்தும் தொகை குறையும் என்றும் மத்திய நிதித்துறை செயலாளர் துகின் கந்த பாண்டே தெரிவித்துள்ளார்.

இதுவரை ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு மட்டுமே வரி செலுத்தவேண்டாம் என்ற நிலை இருந்தது. மேலும் ரூ.12 லட்சம் வருவாய் ஈட்டியவர்கள் ரூ.1 லட்சம் வரை வரி செலுத்தவேண்டியது இருந்தது. இப்போது அந்த ரூ.1 லட்சத்தையும் அவர்களுக்கு மிச்சப்படுத்திவிட்டது. இதுபோல அதற்குமேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கும் வருமான வரி கணிசமாக குறைகிறது. இந்த மிச்சப்படும் தொகையால் பணப்புழக்கம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 600 கோடி அதிகரிக்கும். இந்த தொகையைக்கொண்டு மக்கள் தங்கள் இஷ்டப்படி பொருட்களை வாங்குவார்கள். பெரும்பாலானோர் சேமிக்கவும் செய்வார்கள். இந்த வருமான வரி சலுகையால் மிச்சமாகும் பணத்தை கொண்டு வங்கி டெபாசிட்டுகளில் முதலீடும் செய்வார்கள்.

ஒருபுறம் வருமான வரி சலுகையால் பயன்பெறுபவர்கள் மட்டுமல்லாமல், மூத்தகுடிமக்களின் டெபாசிட்டுகளுக்கு கிடைக்கும் வட்டித்தொகைக்கான வருமான வரி வரம்பு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதால் அவர்களும் தங்களின் மிச்சத்தொகையை கூடுதலாக டெபாசிட்டுகளில் முதலீடு செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ள மத்திய நிதி சேவைத்துறை செயலாளர் எம்.நாகராஜூ, இந்த இரு இனங்களினாலும் வங்கி டெபாசிட்டுகள் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் கோடி வரை அதிகரிக்கும். இப்போதே மூத்தகுடிமக்களின் டெபாசிட்டுகள் ரூ.34 லட்சம் கோடி இருக்கும் நிலையில் இந்த வட்டிக்கான சலுகையால் டெபாசிட் தொகை இன்னும் உயரும் என்று தெரிவித்துள்ளார். ஆக இந்த வருமான வரி சலுகையும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு சலுகையும் அவர்களுக்கும் பலன் அளிக்கிறது, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் துணை நிற்கிறது.

Read Entire Article