
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பொதுமக்கள் நிலம் தொடர்பான மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்கும், நில ஆவணங்களை எளிதாக பெறுவதற்கும் https://eservices.tn.gov.in/eservicesnew/ index.html என்ற இணையதளம் மூலம் பல்வேறு சேவைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த இணையதளத்தில் இருந்து பொதுமக்கள் தங்களது வீடு, நிலம் மற்றும் அனைத்து சொத்துகளுக்கான பட்டா மற்றும் வரைபடங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய எந்த நிபந்தனையும் கிடையாது. ஆனால் இப்போது செல்போண் எண் கொடுத்து அதில் வரும் ஓ.டி.பி. மூலம் தான் ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய முடியும். அதுவும் ஒரு செல்போனுக்கு, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 8 முறை மட்டுமே ஆவணங்களை பெற முடியும். இந்த முறைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் தமிழக அரசு இந்த கட்டுப்பாடுகளை நீக்க மறுத்து விட்டது.
இந்த நிலையில் பொதுமக்களின் வசதிக்காக புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டு வர உள்ளது. இப்போது உள்ள நடைமுறையின்படி, பட்டாவையும், அந்த நிலத்திற்கான வரைபடத்தையும் தனித்தனியாக தான் செல்போனுக்கு வரும் ஓ.டி.பி. கொடுத்து பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால் இனிமேல், மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகியவற்றுடன் சர்வே விவரங்களை கொடுத்துவிட்டாலே, பட்டாவுடன், அதன்கீழ் வரைபடமும் ஒரு சேர வந்துவிடும். அதன் மூலம் பொதுமக்கள் தங்களது நில ஆவண பட்டா மற்றும் வரைபடங்களை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சோதனை முயற்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. அதில் முழு வெற்றி கிடைத்தது. ஆனால் அதனை பிரிண்ட்-அவுட் எடுப்பதில் சில இடையூறுகள் ஏற்பட்டது. எனவே அதனை மேம்படுத்திவிட்டு, விரைவில் நடைமுறைக்கு கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. அதன் மூலம் பொதுமக்கள் தங்களது சொத்திற்கான அளவு, வரைபடங்களை எளிதாக பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.