"இனி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை.." - சரத் பவார் அறிவிப்பு

2 months ago 13

புனே,

இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியான சரத் பவார் கடந்த 1999ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தார். மராட்டிய அரசியலில் நீண்ட அரசியல் அனுபவத்தை கொண்டவர் அவர்.

மேற்கு மராட்டிய மாநிலத்தில் உள்ள பாராமதி சரத்பவாரின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான தொகுதியாகும். பாராமதி மக்கள் சரத்பவாரின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக அவரை எம்.பி., எம்.எல்.ஏ. என இந்த தொகுதியிலிருந்து 14 முறை தேர்வு செய்துள்ளனர்.

இந்நிலையில் பாராமதி சட்டமன்ற தொகுதியில் துணை முதல்-மந்திரி அஜித்பவாரை எதிர்த்து, அவரது தம்பி மகனும், சரத்பவாரின் பேரனுமான யுகேந்திர பவார் போட்டியிடுகிறார். தனது பேரன் யுகேந்திர பவாருக்கு ஆதரவாக சரத்பவார் நேற்று சுபா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், "நான் எனது அரசியல் வாழ்க்கையில் 14 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளேன். உள்ளூர் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று முடிவு செய்து, அனைத்து பொறுப்புகளையும் அஜித்பவாரிடம் ஒப்படைத்தேன். கடந்த 25-30 ஆண்டுகளாக கட்சியின் அனைத்து பொறுப்புகளும் அவரிடம் இருந்தன. இப்போது புதிய தலைமைக்கான ஏற்பாடுகளை செய்யவேண்டிய அவசியம் உள்ளது.

இந்த முழுமையடையாத பணிகளை முடிக்க புதிய தலைமை தேவை. எனது மாநிலங்களவை எம்.பி. பதவி முடிவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டு உள்ளது. அதன்பிறகு, மாநிலங்களவை எம்.பி.யாக வேண்டுமா என்பது குறித்து நான் முடிவு எடுக்கவேண்டும். இனிமேல் நான் நாடாளுமன்ற தேர்தல் அல்லது வேறு தேர்தல்களில் போட்டியிட மாட்டேன். ஆனால் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்" என்று அவர் கூறினார்.

Read Entire Article