சென்னை: ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ரயில் நிலையங்கள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட்டை முன்பதிவு செய்து பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இதில், தட்கல் முறையில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது இடைத்தரகர்களின் குறுக்கீடு காரணமாக சாமானிய மக்களால் முன்பதிவு செய்ய முடியவில்லை என புகார் எழுந்தது. இதுதொடர்பாக, பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், ரயில்வே அமைச்சகத்துடன் இணைந்து ஐஆர்சிடிசி தீவிர விசாரணை நடத்தியது. அதில், கடந்த ஜனவரி முதல் மே வரை தட்கல் முன்பதிவு தொடங்கிய ஒருசில நொடிகளில் 2 லட்சத்து 90,000 பரிவர்த்தனைகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில், 2.5 கோடி பயனர் கணக்குகள் போலியானவை என்பதை உறுதி செய்து ஐ.ஆர்.சி.டி.சி. முடக்கியது. இந்நிலையில், தட்கல் டிக்கெட்களில் பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதமாகவும், மோசடி நடப்பதை தடுக்கும் விதமாகவும் ரயில்வே நிர்வாகம் சில அறிவிப்புகளை வெளியிட்டது. இந்த நடைமுறை ஜூலை 1ம் தேதி (இன்று) முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவில் முகவர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கும் முதல் 30 நிமிடங்களுக்கு முகவர்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. தனிப்பட்ட முறையில் கணக்கு வைத்திருக்கும் மக்கள் முதல் 30 நிமிடங்களை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். முகவர்கள் 30 நிமிடங்கள் முடிந்த பின்பே தட்கல் டிக்கெட் எடுக்க முடியும். இன்று முதல் தங்களுடைய ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து ஓடிபி சரிபார்ப்பு நடைமுறையை முடித்த பயணிகளால் மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். எனவே இன்று முதல் ஐஆர்சிடிசி கணக்கு வழியாக தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் அதற்கு முன்னதாக தன்னுடைய ஆதார் எண்ணை ஐஆர்சிடிசி கணக்குடன் இணைத்து அதனை ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி பெற்று கேஒய்சி நடைமுறைகளை சரி பார்த்து வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் உங்களுடைய கணக்கிலிருந்து நீங்கள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது.
அதேபோல5ம் தேதியிலிருந்து ஐஆர்சிடிசி கணக்கு வழியாக தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது டிக்கெட் முன்பதிவு சமயத்தில் பயனரின் ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்பட்டு சரிபார்க்கப்படும், அதன் பின்னரே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும். தற்போது ரயில் பயணங்களில் முன்பதிவு செய்து இருப்பவர்களுக்கான ரிசர்வேஷன் சார்ட்கள் ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு தான் தயார் செய்யப்படுகின்றன. எனவே வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள் பயண முடிவை எடுப்பதற்கு மிக குறுகிய காலமே இருக்கிறது. இந்நிலையில் ஜூலை 1ம் தேதி (இன்று) முதல் ரயில்கள் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே ரிசர்வேஷன் சார்ட்கள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
The post இனி 8 மணிநேரத்திற்கு முன்பே ரிசர்வேஷன் சார்ட் தயாரிப்பு: ரயில்வே நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.