புதுடெல்லி: மணிப்பூர் இனக்கலவரத்தில் முதல்வர் பிரேன் சிங்குக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, பிரேன் சிங் நேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநிலத்தில் பிரேன் சிங் தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வந்தது. இங்கு கடந்த 2023 மே 3ம் தேதி மாநிலத்தில் மெய்டீஸ் சமூகத்துக்கும், குக்கி, நாகா பழங்குடியினத்தினருக்கும் இடையே பயங்கர இனக்கலவரம் வெடித்தது. இந்த இனக்கலவரத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 250க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து விட்டனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் அவ்வப்போது பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நீடித்து வருகின்றன.
மெய்டீஸ் சமூகத்தை சேர்ந்த முதல்வர் பிரேன் சிங் இனக்கலவரத்தை தடுக்க தவறி விட்டார் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் குற்றம்சாட்டி வந்தன. மேலும் இனக்கலவரம் வெடித்து ஓராண்டுக்கு மேலாகியும் மணிப்பூர் செல்லாத பிரதமர் மோடி குறித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தன.
இனக்கலவரம் தொடர்பாக கடந்த புத்தாண்டு தினத்தன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பிரேன் சிங், “மணிப்பூரில் நடந்த இனக்கலவரத்துக்கு மணிப்பூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். கடந்த கால தவறுகளை மன்னித்து, மறந்து அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்” என அழைப்பு விடுத்திருந்தார்.
ஏற்கனவே மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மணிப்பூர் இனக்கலவரத்தில் முதல்வர் பிரேன் சிங்குக்கு தொடர்பு இருக்கிறது. இதுதொடர்பான ஆடியோ பதிவுகள் வௌியாகி உள்ளன. எனவே, இதுபற்றி உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு, “மணிப்பூர் இனக்கலவரத்தில் முதல்வர் பிரேன் சிங்கின் பங்கு குறித்து வௌியான ஆடியோ பதிவுகளின் நம்பகத்தன்மை பற்றி ஒன்றிய தடய அறிவியல் ஆய்வகம் ஆறு வாரங்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்தநிலையில் இன்று கூடவுள்ள மணிப்பூர் சட்டப்பேரவையில் முதல்வர் பிரேன் சிங்குக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டிருந்தன.
பரபரப்பான இந்த சூழலில், கடந்த 8ம் தேதி டெல்லி சென்ற பிரேன் சிங், பாஜ மூத்த தலைவர்களை சந்தித்து பேசியதாக செய்திகள் வௌியாகின. ஆனால் இந்த சந்திப்புக்கான காரணங்கள் குறித்து எந்த தகவலும் வௌியாகவில்லை. இந்நிலையில் பிரேன் சிங் நேற்று திடீரென்று தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நேற்று மாலை சென்ற பிரேன் சிங், ஆளுநர் அஜய்குமார் பல்லாவை நேரில் சந்தித்து தன் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
தாமதமான முடிவு காங். விமர்சனம்: இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “தற்போதுள்ள சூழ்நிலையை உணர்ந்து மணிப்பூர் முதல்வர் ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா காலதாமதமான முடிவு. இதுபோதாது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பதவி விலக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post இனக்கலவரத்தில் தொடர்பு என குற்றச்சாட்டு மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா appeared first on Dinakaran.