நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே நங்கூரான் பிலாவிளையை சேர்ந்தவர் சந்தைராஜன் (48). இந்து தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர். இவர் மீது வழக்குகள் உள்ளன. காவல்துறையின் சரித்திர பதிவேடு பட்டியலிலும் பெயர் உள்ளது. இந்நிலையில் சுங்கான்கடை பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மனைவி அனுஷா (32), எஸ்.பி. ஸ்டாலினிடம் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், ‘எனது கணவரின் நண்பராக இருந்த சந்தைராஜனிடம், கொரோனா காலத்தில் ரூ.1 லட்சம் கடனாக பெற்று இருந்தேன். 100க்கு 8 ரூபாய் வட்டி என்ற அடிப்படையில் மாதம் ரூ.8,000 கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன், எழுதப்படாத காசோலை மற்றும் எழுதப்படாத பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொண்டு தொகையை தந்தனர்.
இந்த தொகைக்கு 2024ம் ஆண்டு வரை மொத்தம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வரை கட்டி உள்ளேன். அதன் பின்னரும் என்னிடம் பணம் கேட்டு சந்தைராஜன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் மிரட்டினர். திடீரென எனது வீட்டின் முன் நின்ற ரூ.7 லட்சம் மதிப்பிலான காரை திருடி சென்றனர். கடந்த 3.1.2025 என்னை செல்போனில் அழைத்து, நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் மிகவும் அவதூறாக பேசி ஜாதி பெயரை கூறி, சந்தைராஜன் திட்டினார். சம்பவத்தன்று சுங்கான்கடை நான்குவழி சாலைக்கு வர கூறினர். அதன்படி நான் சென்றபோது, அங்கு சந்தைராஜன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் என்னை மிரட்டி, செல்லவிடாமல் தடுத்தனர். பின்னர் சந்தைராஜன் கத்தியை காட்டி மிரட்டி உயிர் பயத்தையும் ஏற்படுத்தினார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்’ என கூறி இருந்தார்.
இந்த புகார் தொடர்பாக எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில், இரணியல் போலீசார் விசாரணை நடத்தி, பெண்கள் வன்கொடுமை மற்றும் கந்து வட்டி தடுப்பு சட்டம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சந்தைராஜன், அவரது டிரைவர் ராஜேஷ், நண்பர்கள் அம்பிளி கண்ணன், சதீஷ் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் சந்தைராஜன், அம்பிளி கண்ணன், சதீஷ் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இந்தநிலையில் மேலும் சில புகார்களும் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, சந்தைராஜனை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து, இரணியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் சந்தைராஜனிடம் 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து சந்தைராஜனை காவலில் எடுத்து இரணியல் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே எஸ்.பி ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், கலெக்டர் அழகுமீனா, குண்டர் சட்டத்தில் சந்தைராஜனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
The post இந்து தமிழர் கட்சி தலைவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது: குமரியில் பரபரப்பு appeared first on Dinakaran.