இந்து சமய அறநிலையத் துறைக்கும் கலெக்டர் ‘டோஸ்’ நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் தொகை வசூல்

6 hours ago 2

*குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி புகார்

நெல்லை : நெல்லை மாவட்டத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் பணம் வசூல் செய்யப்படுவதாக நெல்லையில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். குத்தகையை மாற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்காத இந்து சமய அறநிலையத் துறைக்கும் கலெக்டர் ‘டோஸ்’ விட்டார். அவர்கள் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டார்.

நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சுகுமார் தலைமையில் நடந்தது. மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி, அம்பாசமுத்திரம் வனக்கோட்ட துணை இயக்குநர் இளையராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் வெங்கடேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் விவாதம் வருமாறு:

கசமுத்து: (நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்): நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய கூடுதலாக பணம் கேட்கின்றனர். குறிப்பாக அயன்சிங்கம்பட்டியில் கூடுதலாக 60 ரூபாய் கொடுத்தால் தான் நெல் கொள்முதல் செய்கின்றனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றார்.இதே போல வள்ளியூர் நெல் கொள்முதல் நிலையத்திலும் மூடைக்கு கூலியாக ரூ.35 பெறுகின்றனர். மேலும் கூடுதலாக ரூ.1000, 2000 கொடுத்தால் தான் நெல்லை உடனே கொள்முதல் செய்கின்றனர்.

இல்லையெனில் விவசாயிகளை 10 நாட்கள் காக்க வைத்து விடுகின்றனர். இதனால் நெல் மூடைகளை கொண்டு வந்து போட்டு விட்டு 10 நாட்கள் எங்கும் செல்ல முடியாமல் அங்கேயே காத்திருக்க வேண்டியுள்ளது. அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக உள்ளனர். இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது தொடர்பாக நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் உரிய விசாரணை நடத்துமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

நெல்லை கிழக்கு மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளர் மாடசாமி பேசுகையில், ‘‘தெற்கு வள்ளியூர் விவசாய நிலங்களில் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. தென்னை மரத்தில் உள்ள தேங்காய்கள், இளநீரை பறித்து நாசமாக்கி விடுகின்றன. இதை நேரில் பார்த்து விரட்டிய போது, அங்கிருந்த ஆட்டுக் குட்டியை குரங்குகள் தூக்கிச் சென்று விட்டன. எனவே கூண்டு வைத்து குரங்குளை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றார்.

பெரும்படையார் (தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர்): கோயில் குத்தகை நிலங்களில் விவசாயிகள் பல ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். அனைத்து விவசாயிகளுக்கும் குத்தகை பதிவு அவர்களது, இறந்து போன பெற்றோர்கள் பெயரில் உள்ளது.

இதனால் விவசாயிகளுக்கு அடங்கல் கிடைப்பதில்லை. இறந்தவர்களை அழைத்து வாருங்கள் என அதிகாரிகள் கூறுகின்றனர். நெல் விவசாயம் செய்த போதிலும் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே இந்த நிலங்களை குத்தகை மாற்றித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்கவேல் (கோபாலசமுத்திரம்): நான் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குட்பட்ட 8 ஏக்கர் நிலத்தில் குத்தகை விவசாயம் செய்து வருகிறேன். எனது பெற்றோர் பெயரில் குத்தகை உள்ளது. இந்த குத்தகையை மாற்றித்தர இந்து சமய அறநிலையத்துறை முன் வருவதில்லை.

இதனால் விவசாயம் செய்தும் நெல் விற்க முடியவில்லை என்றார்.இதற்கு பதிலளிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால் இணை ஆணையர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர் சார்பில் பங்கேற்ற ஊழியர், 22ம் தேதி இணை ஆணையருக்கு சென்னையில் கூட்டம் உள்ளது. அதனால் கலந்து கொள்ளவில்லை என்றார்.

இதையடுத்து எச்சரித்த கலெக்டர், கூட்டத்திற்கான அழைப்பை எனக்கு சமர்ப்பியுங்கள். இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்வதில் என்ன பிரச்னை? இந்து சமய அறநிலையத்துறை குத்தகை பதிவேடு பராமரிப்பது கிடையாது. தற்போது புதிய சாப்ட்வேர் வந்து விட்டது. எனவே குத்தகையை மாற்றி வழங்குங்கள். இது தொடர்பாக இணை ஆணையரும், உதவி ஆணையரும் உரிய ஆவணங்களுடன் நேரில் சந்தியுங்கள்.

தொடர்ந்து பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் முருகன், கலெக்டர் கூட்டத்துக்கே வராத இணை ஆணையர் விவசாயிகளை மதிப்பார்களா? இதற்கு தனியாக முகாம் நடத்தி குத்தகையை மாற்றித் தர ஏற்பாடு செய்ய வேண்டும்.’’ என்றார்.கூட்டத்தில் நெல்லை ஆர்டிஓ கண்ணா கருப்பையா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் இளங்கோ உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ரூ.180 கோடியில் ராதாபுரம் கால்வாய் சீரமைப்பு

கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ரஜினி பேசுகையில், ‘‘ ராதாபுரம் கால்வாயில் ஒரு குளங்களுக்கு கூட தண்ணீர் வரவில்லை. இந்த கால்வாய்க்குட்பட்ட 52 குளங்களில் மடைகளை சீரமைக்க கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் எதற்கும் முன் வருவதில்லை.’’ என்றார். அதற்கு ராதாபுரம் கால்வாயை தூர் வார ரூ.180 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதற்கு திட்ட அறிக்கையை விரைவில் தயாரித்து அனுமதி பெறுங்கள். கோதையாறு, சிற்றாறு ஆகிய 2 கோட்டங்களின் அதிகாரிகளும் விவசாயிகள் பிரச்னைகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்த 2 கோட்டங்களின் அதிகாரிகளும் நேரடியாக சந்திக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

11 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல்

நெல்லை மாவட்டத்தில் 62 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டு, 47 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இதில் விவசாயிகளிடம் இருந்து 11096.24 மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

The post இந்து சமய அறநிலையத் துறைக்கும் கலெக்டர் ‘டோஸ்’ நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் தொகை வசூல் appeared first on Dinakaran.

Read Entire Article