இந்தியாவை பிரதிபலிக்கும் நகரமாக சென்னை திகழ்கிறது: ஒன்றிய அமைச்சர் புகழாரம்

3 months ago 9

ஆலந்தூர்: சென்னையில் நடைபெற்ற வடகிழக்கு பிராந்திய மாநாட்டில், மற்ற நாடுகளிடையே இந்தியாவை பிரதிபலிக்கும் நகரமாக சென்னை திகழ்ந்து வருகிறது என்று ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா புகழ்ந்து பேசினார். மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், நேற்று சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில், வடகிழக்கு மாநிலங்களுக்கான வர்த்தகம் மற்றும் தொழில் முதலீடுகள் குறித்து மாநாடு நடைபெற்றது. இதில் அருணாசல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா மாநிலங்களில் முதலீடு செய்வதால் கிடைக்கும் வருவாய் வாய்ப்புகள், வளர்ச்சிகள் குறித்து ஆலோசனைகள் நடந்தன. இம்மாநாட்டில் மிசோரம் மாநில இலகு நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் புல்ங்கிங்லோவ் ஹமா, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சக செயலர் சன்சல் குமார், இணை செயலாளர் சாந்தனு, இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பின் தமிழக துணை தலைவர் பூபேஷ் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்மாநாட்டில், ஒன்றிய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில், 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதமாக இந்தியாவை மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொழில் முனைவோர்களை ஈர்ப்பதற்கான பல்வேறு திட்டங்கள், தேவையான வசதிவாய்ப்புகளை ஒன்றிய அரசு செய்து வருகிறது. மற்ற நாடுகளிடையே இந்தியாவை பிரதிபலிக்கும் நகரமாக சென்னை திகழ்ந்து வருகிறது. இங்கு பழமையான சிற்பங்கள், கலாசார கொள்கைகள் சிறந்து விளங்குகிறது. மேலும், மற்ற மாநிலங்களுக்கு புதிய நவீன தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்புகளை எடுத்துக்காட்டும் விதமாக சென்னை திகழ்கிறது. இங்கு ஐடி துறை, கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வளர்ச்சி அடைந்துள்ளது.

இங்குள்ளதைப் போல் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியடைய அதிக முதலீடுகள் தேவை. தற்போது டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன் ஏஐ எனும் செயற்கை தொழில்நுட்ப வளர்ச்சியும் கணிசமாக அதிகரிக்க துவங்கியுள்ளன. எனவே, சென்னையில் முதலீடு செய்வதை போல், வடகிழக்கு மாநிலங்களிலும் முதலீடு செய்ய முன்வாருங்கள். ஏனெனில், வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடியை ஒன்றிய அரசு முதலீடு செய்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் தற்போது 17 விமான நிலையங்களாக உயர்த்தப்பட்டு உள்ளன. இங்கு விமான போக்குவரத்து நகர்வுகள் 2000 ஆக உயர்ந்துள்ளது. ரூ.18 ஆயிரம் கோடியில் ரயில்வே பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் வடகிழக்கு மாநிலங்கள் ஏற்றுமதி, இறக்குமதி போக்குவரத்திலும் சிறந்ததாக அமையும் என்று ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

 

The post இந்தியாவை பிரதிபலிக்கும் நகரமாக சென்னை திகழ்கிறது: ஒன்றிய அமைச்சர் புகழாரம் appeared first on Dinakaran.

Read Entire Article