இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் : தொடர் நாயகன் விருது பெற்ற வில் யங்

2 months ago 12

மும்பை,

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக வில் யங் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் . இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 59.4 ஓவர்களில் 263 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 90 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 174 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக வில் யங் 51 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளரான அஜாஸ் படேல் கடும் நெருக்கடி கொடுத்தார். இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா (11 ரன்கள்) மற்றும் விராட் கோலி (1 ரன்) இந்த முறையும் ஏமாற்றினர். மேலும் இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் 5 ரன்களிலும், கில் மற்றும் சர்பராஸ் கான் தலா 1 ரன்னிலும் வரிசையாக ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்காக தனி ஆளாக போராடினார். இருப்பினும் மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. பண்ட் 64 ரன்களில் ஆட்டமிழக்க அதோடு இந்திய அணியின் நம்பிக்கையும் தகர்ந்தது.

முடிவில் இந்தியா 2-வது இன்னிங்சில் 121 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி இந்தியாவை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்துள்ளது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அஜாஸ் படேல் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து வீரர் வில் யங் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் . அவர் இந்த தொடரில் 2 அரைசதம் உட்பட 244 ரன்கள் குவித்துள்ளார் இது தொடர்பாக பேசிய வில் யங் கூறியதாவது ,

இது மிகப்பெரியது. நான் எங்கு ஸ்கோர் செய்ய விரும்புகிறேன் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் மற்றும் என்னால் முடிந்தவரை அதைச் செய்ய வேண்டும். நான் எங்கு ஸ்கோர் செய்ய வேண்டும் என்று தெரிந்தது அதனால் மனது மிக தெளிவானது. ரன்கள் குவிக்க முடிந்தது . இது சிறப்பான உணர்வு .என தெரிவித்தார் 

Read Entire Article