
புதுடெல்லி,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டம் மட்டும் துபாயில் நடக்கிறது.
இதில் இன்று நடைபெறுகின்ற 5-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதல் என்றாலே எப்போதும் இரு நாட்டு ரசிகர்களிடம் மட்டுமின்றி வீரர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பும், பதற்றமும் பற்றிக்கொள்ளும். இதேபோல் இந்த ஆட்டத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்த இந்திய அணியும், அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க பாகிஸ்தான் அணியும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிதான் வெற்றி பெற வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் அதுல் வாசன் வித்தியாசமான கருத்தை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "இந்த போட்டியில் பாகிஸ்தான்தான் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் மேலும் சுவாரசியமாக இருக்கும். பாகிஸ்தான் அணி வெற்றி பெறவில்லை என்றால் இந்த தொடர் சுவாரசியமாக இருக்காது. எனவே பாகிஸ்தான் அணி வென்றால் இந்த தொடர் மேலும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டும். அதோடு இந்த தொடரில் சமமான போட்டியும் ஏற்படும்.
இந்திய அணியை பொறுத்தவரை தற்போதைக்கு ஏகப்பட்ட சிறப்பான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். சுப்மன் கில் முதல் அக்சர் படேல் வரை எட்டாவது வீரர் வரை பேட்டிங் செய்கின்றனர். துபாய் மைதானத்திற்கு தேவையான வீரர்களை இந்திய அணி வைத்துள்ளது" என்று கூறினார்.