இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க நிதி பயன்படுத்தவில்லை : ஒன்றிய நிதி அமைச்சகம் விளக்கம்

3 hours ago 1

டெல்லி :இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க நிதி பயன்படுத்தவில்லை என்று ஒன்றிய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்க அதிபராக 2வது முறை பதவியேற்றுள்ள பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில், இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க வழங்கி வந்த ரூ.182 கோடி நிதி உதவி நிறுத்தப்படுவதாக இரு தினங்களுக்கு முன்பு எலான் மஸ்க் தலைமையிலான செயல் திறன் துறை தெரிவித்தது. இந்த நடவடிக்கைகளை வரவேற்ற ட்ரம்ப், இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க முன்னாள் அதிபர் பிடன் நிர்வாகம் ரூ.182 கோடி ஒதுக்கியதாகவும் இது அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி என்று கருதுவதாகவும் விமர்சனம் செய்து இருந்தார்.

இந்திய தேர்தலில் பிடன் தலையிட முயன்றதாக இந்த குற்றச்சாட்டு, தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. வெளிநாட்டு சக்திகளின் கருவியாக ராகுல் காந்தி செயல்படுவதாக பாஜக கடுமையாக விமர்சித்தது. அதே சமயம் இந்தியாவின் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அமெரிக்க நிதி உதவிகள் குறித்த வெள்ளை அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.

இந்த நிலையில் ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்ட 2023 -2024ம் ஆண்டிற்கான அறிக்கையில், ஒன்றிய அரசுடன் இணைந்து அமெரிக்க அமைப்பு வழங்கிய ரூ.6,490 கோடி நிதியில் 7 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த நிதியாண்டில் ரூ.825 கோடியை அந்த அமைப்பு விடுவித்ததாக கூறப்பட்டுள்ளது. வேளாண்மை, உணவு பாதுகாப்பு, குடிநீர், சுகாதாரம், புதுப்பிக்கதக்க எரிவாயு சக்தி, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட சமூக நல திட்டங்களுக்கும் வன மேம்பாடு, பருவநிலை சார்ந்த திட்டங்கள் போன்றவற்றிற்கு மட்டுமே இந்த நிதி பயன்படுத்தப்பட்டதாக நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது. இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க எந்த நிதியும் பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

The post இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க நிதி பயன்படுத்தவில்லை : ஒன்றிய நிதி அமைச்சகம் விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article