டெல்லி: மோசடி கடவு சீட்டில் இந்தியாவினுள் நுழைந்தால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தற்போது, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் தொடர்பான விவகாரங்களை கையாள பாஸ்போர்ட் சட்டம், வெளிநாட்டினர் பதிவு சட்டம் உள்பட 4 சட்டங்கள் அமலில் உள்ளன. இந்நிலையில், மேற்கண்ட 4 சட்டங்களுக்கு பதிலாக, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா-2025 என்ற புதிய மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. இந்த மசோதா கடந்த மார்ச் 11ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், புதிய குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள், மோசடி பாஸ்போர்ட் அல்லது விசா மூலமாக இந்தியாவினுள் நுழையும் வெளிநாட்டினருக்கு 2 ஆண்டுகளுக்கு குறையாமலும், 7 ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை விதிக்கப்படும். அத்துடன், ரூ.1 லட்சத்துக்கு குறையாமலும், ரூ.10 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கப்படும். உரிய பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் நுழையும் வெளிநாட்டினருக்கு 5 ஆண்டுகள் வரையும், ரூ.5 லட்சம்வரை அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனை விதிக்கப்படும். ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியேற்ற மசோதாவில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்தியா வரும் வெளிநாட்டினர் அனுமதிக்கப்பட்ட நாட்களை கடந்து தங்கி உள்ளனரா என்பதை கண்காணிக்க வசதியாக பல்வேறு நடைமுறைகள் மசோதாவில் கட்டாயமாகப்பட்டுள்ளது. மேலும், விமானம் மற்றும் கப்பல்களில் வெளிநாட்டினர் வரும் தகவல்களை சம்பந்தப்பட்ட விமான நிறுவனமும், கப்பல் நிறுவனமும் அதிகாரிகளிடம் முன்கூட்டியே தெரிவிப்பது அவசியம். வெளிநாட்டினர் அடிக்கடி நடமாடும் இடங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post இந்தியாவில் போலி பாஸ்போர்ட், விசா பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்: ஒன்றிய அரசு அதிரடி appeared first on Dinakaran.