இந்தியாவில் சிக்கி தவித்த 27 பேர் வாகா வழியாக பாக். திரும்ப அனுமதி

3 weeks ago 4

இஸ்லாமாபாத்: இந்தியாவில் சிக்கி தவிக்கும் தனது நாட்டு குடிமக்களுக்கு வாகா எல்லையை கடக்கும் பாதையை பயன்படுத்த தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று 27 பேர் பாகிஸ்தான் திரும்பியுள்ளனர். இந்தியாவில் அமிர்தசரஸ் மற்றும் பாகிஸ்தானின் லாகூருக்கு அருகில் அமைந்துள்ள அட்டாரி வாகா எல்லை ஏப்ரல் 30ம் தேதி வரை திறந்து இருந்தது. இரு நாடுகளும் விதித்த காலக்கெடு முடிந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த எல்லை மூடப்பட்டது.

இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு ஒரு நாள் முன்னதாகவே முடிவடைந்து விட்ட நிலையில் சுமார் 71 பாகிஸ்தானியர்கள் வாகா எல்லையில் நேற்று சிக்கி தவித்தனர். இந்திய பக்கத்தில் அட்டாரி எல்லையில் குழந்தைகள் உட்பட 71 பேர் சிக்கி தவிப்பது குறித்து செய்திகள் ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘சில பாகிஸ்தானியர்கள் அட்டாரியில் சிக்கித் தவிப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை நாங்கள் அறிவோம்.

இந்திய அதிகாரிகள் தங்கள் பக்கத்தில் இருந்து எல்லையை கடப்பதற்கு அனுமதித்தால் எங்களது குடிமக்களை திரும்ப பெறுவதற்கு வாகா எல்லையை நாங்கள் திறப்போம். எதிர்காலத்தில் திரும்பி வர விரும்பும் பாகிஸ்தானியர்களுக்கு வாகா எல்லை திறந்து இருக்கும். பாகிஸ்தான் குடிமக்களின் விசாக்காளை ரத்து செய்வதற்கான இந்தியாவின் முடிவு கடுமையான மனிதாபிமான சவால்களை உருவாக்குகின்றது. மருத்துவ சிகிச்சைகள் மற்றும் குடும்ப பிரிவுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றது” என்றார்.

இந்நிலையில் அட்டாரி -வாகா எல்லையில் 71 பாகிஸ்தானியர்கள் சிக்கி தவித்த நிலையில் நேற்று பகல் 12 மணி வரை 27 பேர் அனுமதிக்கப்பட்டனர். 27 பாகிஸ்தானியர்கள் ஒருங்கிணைந்த சோதனை சாவடியின் பாதை வழியாக பாகிஸ்தானுக்குள் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 50 பேர் வரிசையில் காத்திருக்கிறார்கள். சுங்க மற்றும் குடியேற்ற அதிகாரிகளின் உரிய அனுமதிக்கு பின் அவர்களும் பாகிஸ்தானுக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post இந்தியாவில் சிக்கி தவித்த 27 பேர் வாகா வழியாக பாக். திரும்ப அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article