
சண்டிகர்,
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் வசித்து வந்த பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. பாகிஸ்தானியர்களுகு வழங்கப்பட்ட அனைத்து வகை விசாவும் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்தியாவில் வசித்து வந்த பாகிஸ்தானியர்கள், மருத்துவம், சுற்றுலாவுக்கு வந்த பாகிஸ்தானியர்கள் என அனைவரைய்ம் வெளியேற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த 24ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து 786 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலம் அடாரி எல்லை வழியாக இவர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பபட்டுள்ளனர். இதில் 55 பேர் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஆவர். அதேவேளை, பாகிஸ்தானில் இருந்து 1,465 இந்தியர்கள் சொந்த நாடு திரும்பியுள்ளனர்.