சென்னை: இந்தியாவில் அறுவை சிகிச்சை தள தொற்று விகிதம் அதிகமாக இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அறுவை சிகிச்சையின் போது செய்யப்படும் கீறல்கள் மூலம் உள்ளே நுழையும் பாக்டீரியாக்களால் அறுவை சிகிச்சை தள தொற்றுகள் ஏற்படுகின்றன. அவை ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறுகின்றன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் இதன் பாதிப்பு குறித்து கண்டறிய ஐசிஎம்ஆர் பிரத்யேகமான ஆய்வு மேற்கொண்டது. இந்தியாவில் 3 முக்கிய மருத்துவமனைகளில் இருந்து 3,090 நோயாளிகளை தேர்வு செய்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், மற்ற நாடுகளை விட இந்தியாவில் அறுவை சிகிச்சைகளுக்குப் பிந்தைய தொற்று அதிகம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. மொத்தம் 3,090 நோயாளிகளில் 161 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
120 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் அறுவை சிகிச்சைகள் தொற்று நோய்க்கான அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டது. மேலும் எலும்பியல் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள் 54.2 என்ற விகிதத்தில் அறுவை சிகிச்சை தள தொற்று உருவாக்கும் அதிக ஆபத்தில் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில், மருத்துவமனைகளிலிருந்து வெளியேறிய பிறகு ஏற்படும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய தொற்று அதிகம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய தொற்று 1.2 முதல் 5.2 சதவீதம் வரை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக குஜராத்தில் 8.95 சதவீதமும், டெஹ்ராடூனில் 5 சதவீதமும், தொற்று இருப்பதாக தெரிய வந்தது. ஆனால், ஈரானில் 17.4 சதவீதமும், எகிப்தில் 17 சதவீதமும், பாகிஸ்தானில் 7.3 சதவீதமும் தொற்று பரவல் உள்ளது. பல்வேறு வழக்கமான அறுவை சிகிச்சை முறைகளுக்கு உட்பட்ட பிறகு 6 மாதங்களுக்கு நோயாளிகளைக் கண்காணித்ததன் விளைவாக இந்த ஆய்வு அமைந்ததுள்ளதாகவும் நோயாளி டிஸ்சார்ஜிக்கு பிறகும் தொடர் மருத்துவ கண்காணிப்பு முக்கியம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
The post இந்தியாவில் அறுவை சிகிச்சை தள தொற்று விகிதம் அதிகம்: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.