
பெங்களூரு,
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ரன்தீப்சிங் சுர்ஜேவாலா நிருபா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பாதுகாக்கும் நாடு. அத்தகைய நாட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது தீவிரமான விஷயம். பாகிஸ்தானுக்கு இந்த வாய்ப்பு கிடைக்க விடாமல் தடுப்பதில் பிரதமர் மோடி தோல்வி அடைந்துள்ளார். பயங்கரவாத நாடான பாகிஸ்தான் உலகின் பாதுகாப்பு புரோக்கராக மாறியுள்ளது.
அந்த பதவியில் பேய் அமர்ந்துள்ளது. அந்த நாடு பயங்கரவாதத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. பயங்கரவாதிகளின் துறைமுகமாக உள்ள அந்த நாடு பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது. இந்தியா அந்த நாட்டின் பயங்கரவாதத்தை தொடர்ந்து எதிர்கொண்டு வரும் நிலையிலும் பாகிஸ்தான் உலக நாடுகளுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமைதி காக்கிறது. பாகிஸ்தானை இந்த பதவிக்கு வர விடாமல் தடுக்க உலக நாடுகளின் ஆதரவை பெறுவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது. பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து ரூ.8 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளார். இவ்வளவுக்கு பிறகும் அவர் எந்த நாட்டின் ஆதரவை பெற்றுள்ளார்?.
பாகிஸ்தானுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை தடுக்காதது ஏன்?. அந்த பலம் பிரதமர் மோடிக்கு இல்லையா?. இத்தனை நாடுகளுக்கு பயணம் செய்ததால் கிடைத்த பலன் என்ன?. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு பிற நாடுகளின் ஆதரவு கிடைத்தது. இந்தியாவுக்கு எந்த நாடு ஆதரவு வழங்கியது?.
நமது அண்டை நாடுகள் கூட நமக்கு ஆதரவாக நிற்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது அண்டை நாடுகள் நமக்கு ஆதரவாக இருந்தன. இலங்கை, வங்காள தேசம், நேபாளம் ஆகிய நாடுகளுடன் நல்லுறவு இருந்தது. ஆனால் தற்போது பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்த நாடுகள் நமக்கு ஆதரவாக நிற்கவில்லை. பயங்கரவாதத்தை அந்த நாடுகள் கண்டிக்கவில்லை. பாகிஸ்தானுக்கு தலைமை பதவி கிடைத்ததின் மூலம் இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.