இந்தியா-மாலத்தீவு இடையே நாணய மாற்று ஒப்பந்தம்: டெல்லியில் பிரதமர் மோடியுடன் அதிபர் முய்சு பேச்சுவார்த்தை

3 months ago 18

புதுடெல்லி: டெல்லி வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகள் இடையே நாணய மாற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 4 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முய்சு, ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவும், பிரதமர் மோடியும் வரவேற்றனர். இதை தொடர்ந்து ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் மாலத்தீவு அதிபர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், நாணய பரிமாற்ற ஒப்பந்தம் உள்பட பல ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இது அந்த நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு பிரச்னைகளை தீர்க்க உதவும். பிரதமரும், முகமது முய்சுவும் சேர்ந்து மாலத்தீவில் புதிய ரூபே கார்டை அறிமுகப்படுத்தினர். ஹனிமது சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஓடு தளத்தையும் இரு தலைவர்களும் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தனர். அதன் பின்னர் பேட்டியளித்த மோடி,‘‘மாலத்தீவு இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு.தில்லாபுஷியில் உள்ள துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்கும்.

இருதரப்புக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளோம்’’ என்றார். மாலத்தீவு சந்தித்து வரும் நிதி சவால்களை சமாளிக்க உதவும் வகையில், பல உதவிகளை இந்தியா அளிப்பதற்கு மாலத்தீவு அதிபர் நன்றி தெரிவித்தார். சீன ஆதரவு முகமது முய்சு கடந்த ஆண்டு பதவியேற்ற உடன் மாலேயில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமர் மோடியை விமர்சித்தனர். இதனால் மாலத்தீவு நாட்டுனான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. அதன் பிறகு முய்சு தன்னுடைய நிலையை மாற்றி கொண்டார்.

The post இந்தியா-மாலத்தீவு இடையே நாணய மாற்று ஒப்பந்தம்: டெல்லியில் பிரதமர் மோடியுடன் அதிபர் முய்சு பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Read Entire Article