புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த அறிவிப்பு விவகாரத்தில் டிரம்பின் தலையீடு, மோடியின் மவுனம், வெற்றி உரிமை கோரும் பாகிஸ்தானின் கருத்துகள் சர்வதேச அரசியலில் கவனம் பெற்றுள்ளன. இந்தியா – பாகிஸ்தான் இடையே நான்கு நாட்களாக நடந்த ராணுவ மோதல்களைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இவ்விசயத்தில் தலையிட்டு ‘முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தம் ஒப்பந்தம்’ ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும், ‘நீண்டநேர இரவு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் அமெரிக்காவின் மத்தியஸ்த கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன.
வரலாற்று சிறப்புமிக்க இந்த முடிவுக்காக இரு நாடுகளையும் பாராட்டுகிறேன்’ என்று கூறினார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப் மற்றும் இரு நாட்டு மூத்த அதிகாரிகளுடன் 48 மணி நேர பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக கூறினார். இருப்பினும், டிரம்பின் அறிவிப்பு, இந்தியா முறைப்படி உறுதிப்படுத்துவதற்கு முன்பே வெளியிடப்பட்டதால், அரசியல் ரீதியான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, போர் நிறுத்தம் அல்லது டிரம்பின் மத்தியஸ்தம் குறித்து இதுவரை எவ்வித பகிரங்க கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்திய வெளியுறவு அமைச்சகம், போர் நிறுத்தம் இரு நாடுகளுக்கு இடையே நேரடியாக பேசப்பட்டு உருவாக்கப்பட்டது என்றும், அமெரிக்காவின் பங்கு குறைவு என்றும் வலியுறுத்தி கூறியுள்ளது. ஆனால் சில அரசியல் விமர்சகர்கள், இந்தியாவை அமெரிக்கா வழிநடத்துவதாக விமர்சித்துள்ளனர். பிரதமர் மோடியின் மவுனம், இந்தியாவின் இறையாண்மை மற்றும் சுயமரியாதையை வலியுறுத்துவதற்காகவோ அல்லது உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காகவோ இருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மேலும், இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை வெற்றிகரமாக தாக்கியதைத் தொடர்ந்து, போர் நிறுத்தத்தை இந்தியாவின் ராணுவத் திறனே காரணம் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மறுபுறம், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப், இந்த போர் நிறுத்தத்தை தங்கள் நாட்டின் வெற்றியாக சித்தரித்து கருத்து கூறியுள்ளார்.
அவர் நேற்றிரவு பேசுகையில், ‘அனைவரின் நலனுக்காக இந்த முடிவு எட்டப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்தியஸ்தக்கு நன்றி’ என்று தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பிரச்னையை தீர்ப்பது தொடர்பாக 30 நாடுகள் ராஜதந்திர முயற்சியில் பங்கேற்றது. இது பாகிஸ்தானின் அமைதி முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி’ என்று கூறியது. ஆனால், இந்த வெற்றி உரிமை கோரல், பாகிஸ்தானின் அரசியல் நெருக்கடிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் பலம் சரிந்ததால் ஏற்பட்ட அழுத்தம் என்றும் கூறப்படுகிறது. மேலும் பொது மக்களிடையே போருக்கான ஆதரவு குறைவாக இருப்பதால் பாகிஸ்தான் தலைவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளால் பாகிஸ்தான் பின்வாங்கியதாகவும், அதை மறைக்கவே வெற்றி உரிமை கோரி வருவதாகவும் பாஜக தலைவர்கள் சிலர் கேலி செய்துள்ளனர். இருப்பினும், பாகிஸ்தானின் எல்லை மீறல்கள், ஸ்ரீநகர் மற்றும் உதம்பூரில் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக இந்தியா எழுப்பிய குற்றம்சாட்டியதால், போர் நிறுத்தத்தின் நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்தச் சூழலில், டிரம்பின் அரசியல் ரீதியான தலையீடு இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை தற்காலிகமாகத் தணித்தாலும், அதன் நீண்டகால இரு தரப்பு ஒத்துழைப்பையும், பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியலை கையாள்வதையும் பொறுத்தே அமையும். இதற்கிடையே நாளை இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்தியாவின் மவுனமும், பாகிஸ்தானின் வெற்றி உரிமை கோரலும், இந்தப் பிரச்னையின் சிக்கலான தன்மையையும், இரு நாடுகளின் உள்நாட்டு மற்றும் பிராந்திய நோக்கங்களையும் பிரதிபலிக்கின்றன. டிரம்பின் வர்த்தக அதிகரிப்பு உறுதிமொழி, இருநாடுகளுக்குமான பொருளாதார ஒத்துழைப்புக்கு வழிவகுக்கலாம். ஆனால் காஷ்மீர் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளில் நீண்டகால தீர்வு என்பதும் கேள்வியாக உள்ளது.
காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயார்;
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று வெளியிட்ட பதிவில், ‘இந்தியா – பாகிஸ்தான் இடையிலான முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இரு நாடுகளின் தலைமையைப் பாராட்டிய டிரம்ப், ‘இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது வலிமை, நிர்வாக திறனால் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டதற்கு எனது வாழ்த்துகள். இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவுக்கு, அமெரிக்கா உதவியது பெருமையளிக்கிறது. மேலும், இரு நாடுகளுடனும் அமெரிக்க வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன். ஆயிரம் ஆண்டுகளாக தொடரும், காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இரு நாடுகளுடனும் இணைந்து பணியாற்றுவேன்’ என்று கூறினார். டிரம்பின் இந்த அறிவிப்பு, இரு நாடுகளுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான அமெரிக்காவின் திட்டத்தை வெளிப்படுத்தியது போன்று உள்ளது.
The post இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த அறிவிப்பு விவகாரம்; டிரம்பின் தலையீடு, மோடியின் மவுனம், வெற்றி உரிமை கோரும் பாகிஸ்தான்: அமெரிக்கா 48 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் appeared first on Dinakaran.