டெல்லி: இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை இரவு 11 மணிக்கு பிறகு எல்லைப்பகுதிகளில் எந்த தாக்குதலும் நடைபெறாததால் மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருகிறது. பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 9 தீவிரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்ததாக இந்திய ராணுவம் தெரிவித்தது. ஆனால் இந்த தாக்குதலில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன்பிறகு, இந்தியாவின் மேற்கு எல்லையில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. ஆனால் அவற்றை தடுத்து நிறுத்தி இந்திய படைகள் தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் தொடர, போர் பதற்றம் அதிகரித்தது. போரை மூள்வதை தடுக்க இரு நாடுகளும் தாக்குதல்களை கைவிட வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து, சண்டையை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
இந்த நிலையில், இன்று இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் இருநாட்டு ராணுவ தலைமை இயக்குநர்களும் பங்கேற்ற்றுள்ளனர். இதில் அமைதியை தொடர்வது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இரவு 11 மணிக்கு பிறகு எல்லைப்பகுதிகளில் எந்த தாக்குதலும் நடைபெறாததால் மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருகிறது.
The post இந்தியா – பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது appeared first on Dinakaran.