'இந்தியா' கூட்டணியில் சலசலப்பு!

5 hours ago 1

நாடு முழுவதும் 534 தொகுதிகளை உள்ளடக்கிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் பா.ஜனதா கூட்டணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்று தொடர்ந்து ஆட்சி அமைக்கும் நோக்கில் போட்டியிட்டது. இந்த தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே எதிர்க்கட்சிகள் மத்தியில், "பா.ஜனதாவை 3-வது முறையாக ஆட்சி அமைக்கவிடாமல் தடுக்கவேண்டும். எதிர்க்கட்சிகள் பிரிந்து போட்டியிட்டால் வாக்குகள் சிதறிவிடும். இதனால் பா.ஜனதா எளிதில் வெற்றி பெற்றுவிடும். ஆகவே, ஒன்றாக இணைந்து ஒரே குடையின் கீழ் போட்டியிட்டால்தான் வெற்றி பெறமுடியும்" என்ற கருத்து ஆழமாக உருவெடுத்தது.

இந்த முயற்சியை முதலில் முன்னெடுத்தவர் யார் தெரியுமா?, இப்போது பா.ஜனதா கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமாக இருக்கும் ஐக்கிய ஜனதா தள தலைவரான பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார்தான். கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந்தேதி பாட்னாவில் அவர் தலைமையில்தான் எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் கூட்டம் நடந்தது. அதன்பிறகு அடுத்த மாதமே 2-வது கூட்டம் பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடந்தது. இதில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணியை உருவாக்கின. அதாவது, ஆங்கிலத்தில் ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்தையும் ஒன்றாக சேர்த்து 'இந்தியா' கூட்டணி என்று பெயர் சூட்டப்பட்டது.

ஆனால், அடுத்த கூட்டத்திலேயே நிதிஷ்குமார் 'ஜகா' வாங்கி பா.ஜனதா பக்கம் போய்விட்டார். 'இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகள் அங்கம் வகித்தன. இந்த கூட்டணி தேர்தலில் போட்டியிட்டு ஆட்சிக்கு வரமுடியவில்லை என்றாலும், பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது. ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே 'இந்தியா' கூட்டணியில் விரிசல் ஏற்பட தொடங்கியது. மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, 'இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்க தயார்' என்று பகிரங்கமாக அறிவித்தார். அதற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவார் ஆதரவு தெரிவித்தார்.

அதே கருத்துடன் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் 'இந்தியா' கூட்டணிக்கு புதிய தலைவர் தேவை என்ற முழக்கத்தை எழுப்பினர். இந்த சூழ்நிலையில், இப்போது டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் 'இந்தியா' கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்காமல், சமாஜ்வாடி கட்சி மற்றும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியுடன் புதிய கூட்டணியை அமைத்து போட்டியிடுகிறது.

இதுமட்டுமல்லாமல், தேஜஸ்வி யாதவ், "இந்தியா கூட்டணி என்பது நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டும்தான் அமைக்கப்பட்டது" என்று பகிரங்கமாக கூறினார். இதைப்போலவே காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லாவும், "தேர்தலுக்கு பிறகு 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் கூட்டம் ஒருமுறை கூட கூட்டப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டுமே இந்த கூட்டணி உருவாக்கப்பட்டு இருந்தால், இப்போது அதை கலைத்துவிடுவது நல்லது" என்றார். ஆக, மொத்தத்தில் சலசலப்பு மட்டுமல்ல, 'இந்தியா' கூட்டணியை விட்டு மேலும் சில கட்சிகள் வெளியே செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

 

Read Entire Article