இந்தியா ஏ அணிக்கு எதிரான ஆட்டம்... 3ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா ஏ 139/3

2 months ago 13

மெக்கே,

இந்தியா ஏ- ஆஸ்திரேலியா ஏ கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் (4 நாள் ஆட்டம்) போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெக்கே நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா ஏ அணி 107 ரன்னும், ஆஸ்திரேலியா ஏ 195 ரன்னும் எடுத்தன. இதனையடுத்து 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 2 விக்கெட்டுக்கு 208 ரன்கள் அடித்திருந்தது. சாய் சுதர்சன் 96 ரன்களுடனும், தேவ்தத் படிக்கல் 80 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த சூழலில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முடிவில் இந்தியா ஏ 2-வது இன்னிங்சில் 312 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 225 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா ஏ தரப்பில் பெர்குஸ் ஒ நெய்ல் 4 விக்கெட்டுகளும், மர்பி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 225 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா ஏ தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் கான்ஸ்டாஸ் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சாம் கான்ஸ்டாஸ் 16 ரன்னிலும், மார்கஸ் ஹாரிஸ் 36 ரன்னிலும், அடுத்து வந்த கேமரூன் பான்கிராப்ட் 16 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து நாதன் மெக்ஸ்வீனி மற்றும் பியூ வெப்ஸ்டர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.

இறுதியில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா ஏ 50.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் நாதன் மெக்ஸ்வீனி 47 ரன்னுடனும், பியூ வெப்ஸ்டர் 19 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்தியா ஏ தரப்பில் முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா, மனவ் சுதர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி உள்ளனர். ஆஸ்திரேலியா ஏ அணியின் வெற்றிக்கு இன்னும் 86 ரன்களே தேவைப்படுகிறது. நாளை 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Read Entire Article