
அகமதாபாத்,
இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய 50 ஓவர்கள் முடிவில் 356 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சுப்மன் கில் 112 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி களம் கண்ட இங்கிலாந்து அணி 34.2 ஓவர்களில் 214 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் டாம் பாண்டன் மற்றும் கஸ் அட்கின்சன் தலா 38 ரன்கள் அடித்தனர். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அக்ஷர் படேல், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். சுப்மன் கில் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தியது. முன்னதாக நடைபெற்ற முதல் 2 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கையில் பச்சை நிற பட்டை அணிந்து களமிறங்கினர். இதற்கான காரணம் என்னவெனில், 'உடல் உறுப்பு தானம் செய்யுங்கள், உயிர்களை காப்பாற்றுங்கள்' என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த ஆட்டத்தின் மூலம் தொடங்கி இருக்கிறது. இதனை வலியுறுத்தும் வகையில் இரு அணி வீரர்களும் களம் இறங்கியபோது கையில் பச்சைநிற பட்டை அணிந்துள்ளனர்.