இந்தியா - ஆஸ்திரேலியா முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் பிட்ச் எப்படி..? - பராமரிப்பாளர் எச்சரிக்கை

1 day ago 3

பெர்த்,

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று விட்டது.

இந்நிலையில் பெர்த் பிட்ச் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று பிட்ச் தலைமை பராமரிப்பாளர் இசாக் மெக்டொனால்டு எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'தொடர்ச்சியாக அதிவேகமும், நல்ல பவுன்சுக்கு தகுந்தவாறு ஆடுகளத்தை உருவாக்கியுள்ளோம். கடந்த ஆண்டு எப்படி இருந்ததோ அதையே பின்பற்ற விரும்புகிறேன். சென்ற ஆண்டு இங்கு நடைபெற்ற போட்டியின்போது (ஆஸ்திரேலியா- பாகிஸ்தான்) ஆடுகளத்தில் 10 மில்லிமீட்டர் அளவுக்கு புற்கள் விடப்பட்டு இருந்தது. அதன் காரணமாக முதல் 3 நாட்கள் மிகுதியான வேகம் காணப்பட்டது. ஆனால் இரு அணியிலும் அதிவேக பவுலர்கள் இருந்ததால் சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.

இந்த ஆண்டும் அது போலவே இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் சில பேட்ஸ்மேன்கள் இத்தகைய சூழலை சிறப்பாக எதிர்கொண்டு துரிதமாக ரன் எடுக்க முடிந்தது போல் இந்த முறையும் எடுக்க முடியும். இந்த டெஸ்ட் 5-வது நாளுக்கோ அல்லது கடந்த ஆண்டை போல 4-வது நாளின் கடைசி பகுதிக்கோ செல்லும் என்று நம்புகிறேன். போக போக ஆடுகளத்தில் விரிசல் ஏற்பட்டால், ஆட்டத்தின் போக்கை மாற்றும்' என்று கூறினார்.

Read Entire Article