புதுடெல்லி,
உலக அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5-ந்தேதி நடந்தது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிட்டார்.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் 270-க்கும் கூடுதலான எலக்டோரல் வாக்குகளைப் பெற்று டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்க உள்ளார். அவருக்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக டிரம்ப்புக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இந்நிலையில், இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், அவரது குடியரசு கட்சியின் வெற்றிக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். டிரம்ப்பின் வெற்றியானது அமெரிக்க மக்கள் அவரது தலைமை மற்றும் தொலைநோக்கு சிந்தனை மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்த உரையாடலின்போது தொழில்நுட்பம், பாதுகாப்பு, ஆற்றல், விண்வெளி மற்றும் பல துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தற்கான தங்கள் அர்ப்பணிப்பை அவர்கள் உறுதிப்படுத்தினர். இரு நாட்டு மக்களின் நலனுக்காகவும், உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காகவும் இந்தியா-அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர்.
அதோடு கடந்த முறை டிரம்பின் ஆட்சிக் காலத்தில், 2019 செப்டம்பரில் ஹூஸ்டனில் நடந்த 'ஹவுடி மோடி' நிகழ்வு மற்றும் 2020 பிப்ரவரியில் டிரம்பின் இந்திய வருகையின்போது அகமதாபாத்தில் நடந்த 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்வு உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.