
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் விண்வெளி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை வசதியை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து பேசியதாவது:-
உத்தர பிரதேச பாதுகாப்பு வழித்தடத்தில் விமான உற்பத்தி, டிரோன்கள் உள்ளிட்ட பெரிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளை பார்க்கும்போது, நமது இலக்குகளை சரியான நேரத்தில் நிறைவேற்றுவது மிகவும் முக்கியம். வெறும் 40 மாதங்களில், இந்த திட்டம் நிறைவடைந்துள்ளது. உத்தரபிரதேச முதல்-மந்திரிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாஜ்பாய் தலைமையில் விஞ்ஞானிகள் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி நமது வலிமையை உலகிற்கு காட்டினர். இந்தியாவை வளர்ப்பதில் நாம் மிகுந்த பலத்துடன் முன்னேற வேண்டும்.
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடு பாதுகாப்பாக இருக்காது என்பதை பாகிஸ்தானுக்கு உணர்த்தி உள்ளோம். எல்லையில் உள்ள ராணுவ நிலைகளுடன் மட்டும் நமது நடவடிக்கையை நிறுத்திவிடவில்லை. இந்தியப் படைகளின் முழக்கம் பாகிஸ்தானின் ராணுவ தலைமையகமான ராவல்பிண்டி வரை சென்றுள்ளது. அங்குள்ள பல ராணுவ இலக்குகளைத் தாக்கி வலுவான பதிலடியை வழங்கியது. எனினும், பொதுமக்களை இலக்காக வைத்து நாம் தாக்குதல்கள் நடத்தவில்லை. பாகிஸ்தான் ராணுவம் தான் வழிபாட்டு தலங்கள், அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.