இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியால் ஸ்தம்பித்த சென்னை..! நிகழ்ச்சி நிறைவடைந்து 2 மணி நேரம் ஆகியும் குறையாத கூட்ட நெரிசல்

1 month ago 9

சென்னை: இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக சென்னை , காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து திரண்டு வந்த மக்களால் சென்னை சாலைகள் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகின. இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகள் நிறைவடைந்து 2 மணி நேரம் ஆகியும் அண்ணா சாலை,பாரிமுனை, அண்ணா மேம் பாலம் , காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் அலைமோதிய கூட்டம்
விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக வந்த பொது மக்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து அண்ணா சதுக்கத்திற்கு வழக்கமாக இயக்கப்படும் 120 பேருந்துகளுடன் கூடுதலாக 75 பேருந்துகளும், அரசினர் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 25 சிற்றுந்துகளும் இயக்கப்பட்டன.அதேபோல், மெட்ரோ நிர்வாகம் சார்பில் நிமிடத்திற்கு ஒரு ரயில் வீதம் இயக்கப்பட்டது. இன்று காலை முதலே சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் மெட்ரோவில் பயணிக்க படையெடுத்ததால், வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல் ஓமந்தூரார் தேனாம்பேட்டை சைதாப்பேட்டை ஆகிய மெட்ரோ நிலையங்களில் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அனைத்து மெட்ரோ ரயில்களும் நிரம்பி காணப்பட்டன.

யூடியூபை லட்சக்கணக்கானோர் பார்வை
இந்திய விமான படையின் வான்வழி சாகசத்தை மெரினாவில் கண்டு களிக்க முடியாதவர்களுக்காக air force youtube பக்கத்தில் நேரடியாக சாகச நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதனை 2 மணி நிலவரப்படி2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர். மேலும் இந்திய வீரர்களின் சாகசங்களை கண்டு தங்களுடைய கருத்துக்களையும் கமெண்ட்களாக பதிவு செய்தனர். இது மட்டுமல்லாது சாகச நிகழ்ச்சிக்கான முழு வீடியோ பதிவையும் இந்தியன் விமானப்படையில் அதிகாரப்பூர யூ டியூப் பக்கத்தில் பதிவேற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.

வீதிகளில் நின்று வியந்து பார்த்த மக்கள்
இந்திய விமானப்படை சாகசங்கள் காண்பதற்காக காலை 7 மணி முதல் இருந்து ஏராளமானோர் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக மெரினா கடற்கரையை நோக்கி படையெடுத்து வந்திருந்தனர். குறிப்பாக 9 மணிக்கு மேல் சென்னையின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக காணப்பட்டது. சாகச நிகழ்வு நடக்கும் இடத்திற்கு செல்ல முடியாததால் வாகன ஓட்டிகள் வீதிகளிலேயே வாகனத்தை நிறுத்தி விமானங்களை பார்வையிட்டனர். அதேபோல் சாலையில் நடந்து சென்றவர்களும் விமான சாகசங்களை பார்வையிட்டு தங்களுடைய செல்போன்கள் மூலம் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

The post இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியால் ஸ்தம்பித்த சென்னை..! நிகழ்ச்சி நிறைவடைந்து 2 மணி நேரம் ஆகியும் குறையாத கூட்ட நெரிசல் appeared first on Dinakaran.

Read Entire Article