
சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஜம்மு - காஷ்மீர் பகுதியில் உள்ள பகல்ஹாம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு உள்ளூர்வாசி உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஜம்மு - காஷ்மீர் பகுதிகளில் பயங்கரவாதிகள் முகாம்கள் அமைத்து இந்திய எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ஊக்கம் அளித்து வருவது இரு நாடுகளின் நல்லுறவுக்கு கேடு விளைவிக்கும்.
பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 உயிர்களை பலி கொடுத்த போதும், இந்திய ராணுவம் மிகுந்த பொறுப்புணர்வுடன், உயர்தரம் வாய்ந்த யுத்தி வகுத்து கடந்த 07.05.2025 செந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பயங்கரவாதிகள் முகாம்கள் மட்டும் குறிவைத்து தகர்க்கப்பட்டு, சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவ தளத்திற்கோ, குடி மக்களுக்கோ எந்தவொரு சிறு பாதிப்பும் ஏற்படாமல், பயங்கரவாதிகள் மட்டும் அழித்தொழிக்கப்பட்டதை நாடு ஒரு முகமாக வரவேற்றது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அரசும், ராணுவமும் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து அப்பாவி மக்கள் 16 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த அதீத ஆத்திரமூட்டும் செயலையும் இந்திய ராணுவம் மிகுந்த எச்சரிக்கையுடன் அணுகி வருவதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கவனத்தில் கொண்டு, வரவேற்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டு ஒட்டு மொத்த மக்களும் இந்திய ராணுவத்தோடு இணைந்து நிற்பார்கள் என்ற உணர்வை வெளிப்படுத்தும் முறையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் நாளை 10.05.2025 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் இந்திய ராணுவ ஆதரவுப் பேரணியில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியும், அதன் வர்க்க, வெகு மக்கள் அமைப்புகளும் பங்கேற்கும் என்பதுடன், அனைத்துப் பகுதி மக்களும் பேரணியில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.