மும்பை,
இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்கும் வேலையில் பி.சி.சி.ஐ. இறங்கியுள்ளது. ஏனெனில் தற்போதைய கேப்டனான ரோகித் சர்மா, சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரைதான் செயல்படுவார் என்று பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
குறிப்பாக நியூசிலாந்து அணிக்கெதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடர் என அடுத்தடுத்த தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்திய அணி தவறவிட்டது.
இந்த தோல்விகளுக்கு கேப்டனாக மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் சொதப்பிய ரோகித் சர்மா முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் அவர் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், ரோகித் சர்மா, தான் இன்னும் சில மாதங்கள் வரை கேப்டனாக இருக்க விரும்புவதாக பி.சி.சி.ஐ.-யிடம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி முடியும் வரை தான் கேப்டனாக இருக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
ரோகித் சர்மாவுக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டனாக பும்ராவை நியமிக்க பி.சி.சி.ஐ. ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. இருப்பினும் அவர் வேகப்பந்து வீச்சாளர் என்பதால் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவருக்கு அடிக்கடி ஓய்வு கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒரு டெஸ்ட் தொடரின் இடையே பும்ரா காயத்தால் விலகினாலோ, பணிச்சுமை காரணமாக விலகினாலோ அது அணியில் குழப்பத்தை ஏற்படுத்தும்.
அதன் காரணமாக வலுவான துணை கேப்டனை நியமிக்க பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது. அதற்கு ரிஷப் பண்ட் பெயரை தேர்வுக்குழு முன் வைத்துள்ளது. ஆனால் தலைமை பயிற்சியாளரான கம்பீர், இளம் தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வாலை நியமிக்க பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பி.சி.சி.ஐ.-ம் இதனை பரிசீலனை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.