நாகை: இந்திய எல்லையில் பைபர் படகில் மீன்பிடித்த நாகை மீனவர்களை தாக்கி வலைகளை அறுத்து, எரிபொருளை இலங்கை கடற்படையினர் பறித்து சென்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம், செருதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று முன்தினம் (21ம் தேதி) இரவு செருதூரில் இருந்து கடலுக்கு, அப்பகுதி மீனவர்கள், மீன்பிடிக்க சென்றனர்.
நேற்று (22ம் தேதி) அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இந்திய எல்லைக்குள் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகு மீது ரோந்து கப்பலை மோத செய்துள்ளனர். பின்னர் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க விரித்து வைத்திருந்த வலைமீது ரோந்து கப்பலை செலுத்தினர். இதனால் மீன் பிடி வலைகள் அறுந்து சேதமானது. இலங்கை கடற்படையினரிடம் ஆயுதங்கள் இருந்ததால் அச்சம் அடைந்து, தங்களை காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தப்ப முயன்றனர்.
அப்போது நாகை மீனவர்கள் படகில் ஏறி, ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட பொருட்களை பறித்து கொண்டுள்ளனர். எரிபொருளையும் பறித்து சென்றுள்ளனர். இலங்கை கடற்படையினர் சென்ற பின் போதிய எரிபொருள் இல்லாமல் நாகை மீனவர்கள் நடுக்கடலில் தவித்துள்ளனர். அப்போது அங்குவந்த தமிழக மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.
செருதூர் மீன் இறங்கு தளத்திற்கு வந்து சேர்ந்த மீனவர்கள் கூறும்போது, ‘ரூ.2.60 லட்சம் மதிப்புள்ள வலைகளை இலங்கை கடற்படையினர் நாசப்படுத்திவிட்டனர். இந்திய எல்லையில் மீன்பிடித்த, எங்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளனர். ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்’ என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
The post இந்திய எல்லையில் மீன்பிடித்த நாகை மீனவர்களின் படகு மீது ரோந்து கப்பலால் மோதி தாக்குதல்: வலைகள் அறுப்பு இலங்கை கடற்படை அட்டூழியம் appeared first on Dinakaran.