நாகை: இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்கீழ், கிழக்கு கடற்கரை வங்கக்கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கவும் ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்படி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் (ஜூன்-14ம்) தேதி வரை விசைப்படகில் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் பைபர் படகு, சிறிய ரக படகுகளில் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில், நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்த 4 மீனவர்கள் பைபர் படகில் கோடியக்கரை பகுதியில் இந்திய எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு அத்துமீறி வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகு மீது மோதி தாக்குதல் நடத்தினர்.
மேலும் அவர்களிடம் இருந்த ரூ.2.60 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ வலை, டீசல், வாக்கி டாக்கி மற்றும் ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை பறித்துக்கொண்டு சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக கரை திரும்பினர். இலங்கை கடற்படையின் அத்துமீறலில் மீனவர்களுக்கு காயம் ஏதேனும் ஏற்பட்டதாக என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. கரை திரும்பிய மீனவர்கள் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் அத்துமீறல்..!! appeared first on Dinakaran.