டெல்லி : இந்திய அரசியல் வரலாற்றிலேயே நாடாளுமன்றத்துக்கு ஒரே நேரத்தில் 3 பெண் கவிஞர்களை அனுப்பியிருப்பது திமுக மட்டுமே என்ற பெருமையை அக்கட்சி பெற்றுள்ளது. திமுக சார்பில் கவிஞர்களான கனிமொழி, தமிழச்சி ஏற்கனவே எம்.பி.க்களாக உள்ள நிலையில் மற்றொரு கவிஞர் சல்மா எம்.பி.ஆகிறார். ஜூன் 19 நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் என்ற கவிஞர் சல்மா, ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
இவர்களில் கவிஞர் சல்மா திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தவர். பொன்னாம்பட்டி பேரூராட்சி தலைவராக இருந்த சல்மா 2006 சட்டமன்ற தேர்தலில் மருங்காபுரி தொகுதியில் போட்டியிட்டவர். தமிழ்நாடு சமூக நல வாரிய தலைவராக பணியாற்றியுள்ளார் சல்மா. கவிஞர் சல்மா நீண்டகாலமாக திமுகவில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். எம்.எம்.அப்துல்லாவுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த கவிஞர் சல்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதே போல், திமுகவில் நீண்டகால களப்பணியாளராக செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.சிவலிங்கத்துக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டுள்ளது. எஸ்.ஆர்.சிவலிங்கம் 1989 மற்றும் 1996 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். சிறுவயது முதலே திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வரும் சிவலிங்கம் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது கள்ளக்குறிச்சி தொகுதியில் சிவலிங்கம் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் தற்போது மாநிலங்களவை தேர்தலில் சிவலிங்கத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக சேலம் மாவட்டத்தில் திமுகவை வலுப்படுத்தும் வகையில் சிவலிங்கத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஸ்.ஆர்.சிவலிங்கம், “40 ஆண்டுகளாக திமுகவில் பணியாற்றுகிறேன். தொண்டனுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளார் முதலமைச்சர். திமுக தலைவரின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும். இது விசுவாசத்துக்கு கிடைத்த மாநிலங்களவை சீட்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post இந்திய அரசியல் வரலாற்றிலேயே நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் 3 பெண் கவிஞர்களை அனுப்பியிருப்பது திமுக மட்டுமே!! appeared first on Dinakaran.