இந்திய அணிக்கு ஐ.சி.சி. தண்டனை வழங்க வேண்டும் - ஆஸி.பயிற்சியாளர்

1 day ago 1

சிட்னி,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் இறுதி ஓவரை இந்திய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ரா வீசினார். அவர் ஒரு பந்தை வீசுவதற்கு சில அடி ஓடி வந்தபோது, பேட்ஸ்மேன் கவாஜா இன்னும் தயாராகவில்லை என நடுவர் சிக்னல் காட்டினார். இதனால் அதிருப்தியடைந்த பும்ரா என்னப்பா இது.... என்பது போல் இரு கைகளையும் விரித்தபடி கேட்க, எதிர்முனையில் நின்ற இளம் பேட்ஸ்மேன் கான்ஸ்டாஸ் அவரை ஏதோ சொல்லி சீண்டினார்.

இதனால் கோபமடைந்த பும்ரா பதிலுக்கு வார்த்தைகளை உதிர்த்தார். பிறகு நடுவர் தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தினார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடைசி பந்தில் கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்தியதும் பும்ரா நேராக கான்ஸ்டாஸ் அருகே ஓடி வந்து ஆக்ரோஷமாக கத்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் ஒட்டுமொத்த இந்திய அணியும் வெறித்தனமாக கொண்டாடினர்.

இந்நிலையில் இந்திய அணியினர் சாம் கான்ஸ்டாசை மிரட்டும் வகையில் கொண்டாடியதாக ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார். எனவே இந்திய அணியினருக்கு ஐ.சி.சி. தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா என்ற வகையில்தான் கான்ஸ்டாசிடம் அது குறித்து என்னுடைய பேச்சு வார்த்தை இருந்தது. இந்தியா நடந்து கொண்ட விதம் கொஞ்சம் மிரட்டலாக இருந்தது என்பது தெளிவாக தெரிந்தது. அதே சமயம் அது விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருப்பது தெளிவாக இருப்பதாலேயே எந்த தண்டனைகளும் கொடுக்கப்படவில்லை. இதை ஐ.சி.சி. மற்றும் போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்ட் அவர்களிடம் விடுகிறேன். இது ஏற்றுக் கொள்ளக் கூடியது என்று அவர்கள் கருதினால் அது நாங்களும் அப்படி விளையாடுவதற்கான அளவுகோல் என்று நினைக்கிறேன்" என கூறினார்.

Read Entire Article