ஒரு காலத்தில் ஒரு ஊரில் இரண்டொரு பேருக்கு சர்க்கரை நோய் இருக்கும். அவருக்கு சுகர் இருக்கு என அந்த நபர்களைக் குறிப்பிட்டுச் சொல்வார்கள். இப்போது சர்க்கரை நோய் என்பது நார்மலைஸ் ஆகியிருக்கிறது. ஓர் அலுவலகம் என்றால் சுகர் போடாத டீயை தனியாக கொண்டு வர வேண்டியிருக்கிறது. சுகர் பேஷண்ட் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையே வந்துவிட்டது. டீக்கடைக்காரர்கள் முன்பெல்லாம் சிங்கிள், பார்சல் டீ, ஒரு டீ என்ற வார்த்தைகளைத்தான் கேட்டுக் கொண்டிருப்பார்கள். இப்போது வித் அவுட் சுகர், சர்க்கரை இல்லாம, அரை சர்க்கரை என்ற வார்த்தைகளையே அதிகம் கேட்கிறார்கள். அந்தளவுக்கு நாடு முழுக்க நீரிழிவு நோயாளிகள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். மாறி வரும் உணவுக் கலாச்சாரம், வாழ்வியல் முறை, தூக்கமின்மை, சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாமை போன்றவைதான் சர்க்கரை நோயாளிகள் சரமாரியாக பெருக்கம் அடைய காரணிகளாகி இருக்கின்றன.
சர்க்கரை நோய்க்கு மாத்திரைகள் எடுக்கப்படும் அதே சமயத்தில் சில இயற்கையான காய்கறி, தானியங்களை உட்கொண்டால் நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய், சுரைக்காய் போன்ற காய்கறிகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உகந்த காய்களாக உள்ளன. இதை உணர்ந்த விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் சுரைக்காயைப் பயிரிட்டு, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுரைக்காயை இலவசமாக வழங்கி வருகிறார். தமிழ்நாட்டின் குளுகுளு பிரதேசமான நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மதுரை ஊராட்சி நெல்லிக்கரை கிராமத்தைச் சேர்ந்த சிவதேவன்தான் அந்த விவசாயி. பாகற்காய், வாழை, சௌ சௌ, ஏலக்காய், குறு மிளகாய், காப்பி உள்ளிட்ட பல பணப்பயிர்கள் விளையும் இவரது தோட்டத்தில் சுரைக்காய் மட்டும் சேவைப் பயிராகி இருக்கிறது. ஒரு காலைப்பொழுதில் சிவதேவனைச் சந்தித்தோம்.
“இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் எல்லோரும் பாரம்பரியமாக இயற்கை வழியில் வெள்ளாமை பார்ப்பவர்கள்தான். காலப்போக்கில் செயற்கை உரங்கள், பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டதால் மண்வளம் வெகுவாக பாதிப்பு அடைந்திருக்கிறது. இழந்த மண்வளத்தை மீட்டெடுக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் தற்போது இயற்கை முறை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். நானும் அந்த வகையில் எனது தோட்டத்தில் முழுக்க முழுக்க இயற்கை வழி விவசாயத்தைத் தொடர்ந்து வருகிறேன்’’ என பேச ஆரம்பித்த சிவதேவன், மேலும் தொடர்ந்தார். எங்கள் குடும்பம் சார்பில் கூட்டாக நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். எங்களுக்கு சுமார் 18 ஏக்கர் நிலம் இருக்கிறது. எனக்கென்று தனியாக ஒன்றரை ஏக்கர் இருக்கிறது. இந்த நிலங்களில், எங்கள் பகுதியின் பிரத்யேக பயிர்களான காபி, குறுமிளகு, சௌ சௌ உள்ளிட்டவற்றை சாகுபடி செய்திருக்கிறோம். அதோடு நேந்திரன் வாழை, பாகற்காய் உள்ளிட்டவற்றையும் பயிரிட்டு இருக்கிறோம்.
பாரம்பரிய காய்கறிகளை சாகுபடி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அதிகமாக இருக்கிறது. வீரிய ரக விதைகள் பல பிராசஸ்களிடையே உருவாக்கப்படுகின்றன. அவற்றில் நமக்குத் தேவையான உயிர்ச்சத்துகள் இருக்காது. நமது வீட்டில் அம்மா சமைத்த உணவுக்கு நமது உடல் பழகிவிடும். வெளியில் சாப்பிட்டால் சுவை மாறுபடுவதுடன் உடலுக்கும் ஏதாவது சிறு சிறு பாதிப்பு வரும். அதேபோல நம்மூரில் விளையும் நாட்டு ரக காய்கறிகளில் உள்ள பல உயிர்ச்சத்துகள் நமது உடலுக்கு ஏற்றவையாக இருக்கும். வீரிய ரக காய்கறிகளில் அது இருக்காது. இதனால் நான் முதல்கட்டமாக நாட்டுச் சுரைக்காய் பயிரிடலாம் என நினைத்தேன். கடந்த ஆண்டில் பல்வேறு இடங்களில் அலைந்து நாட்டுச்சுரைக்காய் விதைகளை வாங்கினேன். அதில் சிலவற்றை ஆடிப்பட்டத்தில் எனது நிலத்தில் ஊன்றினேன். மாட்டு எரு, கோழி, எரு, ஜீவாமிர்தம் போன்ற இயற்கை இடுபொருட்களை இட்டு வளர்த்ததில் நல்ல விளைச்சல் கிடைத்தது.
சுரைக்காய் பொதுவாக உடம்பில் உள்ள தேவையற்ற உப்புகளை கரைத்து விடும் தன்மை உடையது. சிறுநீரகத்திற்கு நல்ல பாதுகாப்பையும் வழங்கும். இத்தகைய மகத்துவம் மிகுந்த நாட்டுச் சுரைக்காயை நான் இலவசமாக வழங்க முடிவெடுத்தேன். அதன்படி சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இலவசமாகவே வழங்குகிறேன். இந்த ஆண்டு குறைவாகத்தான் பயிரிட்டேன். அடுத்த ஆண்டில் கூடுதலாக பயிரிடுவேன்’’ என மகிழ்ச்சியுடன் கூறி முடித்தார்.
தொடர்புக்கு:
சிவதேவன்: 94884 55603.
* இந்தத் தோட்டத்தில் விளையும் வாழை, சௌ சௌ உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும் தோட்டத்திலேயே விற்பனை ஆகிவிடுகின்றன. இயற்கை முறை விளைச்சல் என்பதால் பல மொத்த வியாபாரிகள் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள்.
* நீலகிரியில் தமிழ்நாடு ஆர்கானிக் விவசாயிகள் சொசைட்டி, நீலகிரி தோட்டக்கலை விவசாயிகள் சொசைட்டி ஆகிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகளின் மூலமும் இயற்கை விவசாய விளைபொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன.
The post இந்தத் தோட்டத்தில் விளையும் சுரைக்காய் விற்பனைக்கு அல்ல! appeared first on Dinakaran.