ஈரோடு, ஜன.14: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையான சோதனை மற்றும் ஒதுக்கீட்டின்படி, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடந்த, 2023 இடைத்தேர்தலுக்கு பின்னர், மாநகராட்சி அலுவலகத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, அவை அனைத்தும், ஈரோடு ஆர்.டி.ஓ அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணைய கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு, 8 பேர் கொண்ட ‘பெல்’ நிறுவன பொறியாளர்களின் தலைமையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகி இருந்த வாக்குகள் அனைத்தும் அகற்றப்பட்டும், பழுதடைந்த இயந்திரங்களில் பழுது நீக்கம் செய்யப்பட்டும் வாக்குப் பதிவுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டன. மேலும், மாற்றம் செய்யப்படவேண்டிய இயந்திரங்கள் மாற்றியும் வைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம் மாதிரி வாக்குப்பதிவு முடிந்தது. தொடர்ந்து, நேற்று அந்த இயந்திரங்கள் கணினி சுழற்சி முறையில் வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதையடுத்து, நேற்று மாலையில் 284 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 284 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 308 விவிபேட் யூனிட்கள் ஆகியவை, கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மனீஷிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் அவை, மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. தொடர்ந்து, அனைவரது முன்னிலையிலும், அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்தல் நாளுக்கு சில நாட்கள் முன்பாக, வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் போன்றவை பொருத்தப்படும். தேர்தலுக்கு முந்தைய நாளில் அவை, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்படும்.
The post இந்த நாள் பொங்கல் விற்பனை மும்முரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.