இந்த சீசன் எங்களுக்கு மோசமாக அமைய இதுவே காரணம் - ரிஷப் பண்ட்

1 day ago 3

லக்னோ,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்றிரவு அரங்கேறிய 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 118 ரன்களுடன் களத்தில் இருந்தார். பெங்களூரு தரப்பில் நுவான் துஷாரா, புவனேஷ்வர் குமார், ரொமாரியோ ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜிதேஷ் ஷர்மா 85 ரன்களும்,விராட் கோலி 54 ரன்களும் அடித்தனர். லக்னோ அணி தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்நிலையில், இந்த போட்டியில் தோல்வி கண்ட பின்னர் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த போட்டியில் 40 ஓவருமே நல்ல கிரிக்கெட்டை பார்த்துள்ளீர்கள். நிச்சயமாக டி20 போட்டிகளில் எப்போதுமே கடைசி பந்து வரை ஒரு அணியின் வெற்றி என்பது உறுதியாகி விடாது என்பதை இந்த போட்டி காண்பித்து இருக்கிறது.

இந்த தொடர் முழுவதுமே நாங்கள் மிகப்பெரிய சரிவை சந்தித்ததற்கு காரணம் எங்கள் அணியில் இடம்பெற்ற பெரும்பாலான வீரர்கள் காயத்தால் பாதிக்கப்பட்டது தான் என்று கூறுவேன். அப்படி நிறைய வீரர்களை நாங்கள் காயத்தால் தவறவிட்டது இந்த சீசனில் எங்களை மிகவும் வருத்தியுள்ளது. இந்த போட்டியில் நான் சதம் அடித்ததில் மகிழ்ச்சி தான். இந்த போட்டியை போன்றே அனைத்து போட்டியிலும் விளையாட நினைத்தேன்.

ஆனால், அது அமையாமல் சென்று விட்டது. இந்த போட்டியில் நான் மிகச் சிறப்பாக பேட்டிங்கை ஆரம்பித்ததாலே பெரிய ரன்களை குவிக்க முடிந்தது. இந்த தொடரில் நாங்கள் அடைந்த தோல்வியின் மூலம் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டுள்ளோம். மேலும், எங்களுடைய பலவீனங்களை சரி செய்ய இன்னும் நாங்கள் அமர்ந்து பேச வேண்டிய விசயங்கள் நிறைய இருக்கிறது. அதனை சரிசெய்து இனிவரும் காலங்களில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article