இதை செய்தால்தான் விஜய்யை அரசியல் தலைவராக அங்கீகரிக்க முடியும் - கே.பி.முனுசாமி

2 hours ago 2

திருவண்ணாமலை,

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். இந்த கட்சியின் முதல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார்.

இதனிடையே அதிமுக - தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி வைக்கப்போவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் அ.தி.மு.க.வுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி வெளியிடப்படும் செய்தி முற்றிலும் தவறானது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மறுத்தார். மேலும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலை சந்திக்கத் த.வெ.க. தயாராகி வருகிறது என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, "நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியுள்ளார். விஜய் உடன் இருப்பவர்கள் ரசிகர்களே தவிர தொண்டர்கள் இல்லை. அவரது ரசிகர்கள் தொண்டர்களாக மாற வேண்டும். மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அத்துடன், விஜய் நீண்ட தூரம் அரசியலில் பயணிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் அரசியல் ரீதியிலாக தலைவர் என்கிற அங்கீகாரத்தை அவர் பெற முடியும். மக்களையும், அரசியல் கட்சிகளையும் திசை திருப்பும் நோக்கத்தில் ஆட்சியில் பங்கு என்று விஜய் பேசியிருக்கலாம்.

அ.தி.மு.க. தற்போது 53வது ஆண்டில் பயணித்து வருகிறது. இரண்டு கோடி தொண்டர்களை நம்பி எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். தற்போது எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க, விரைவில் ஆளும் கட்சியாக மாறும். புதிய புதிய கட்சிகள் உருவாகியுள்ளதால் 2026 ம் ஆண்டு நமக்கு மிகப்பெரிய பலப்பரிட்சையாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

Read Entire Article