‘இதெல்லாம் உனக்கு விளையாட்டுப் பொருளா?’ என பல நேரங்களில் வீட்டில் இருக்கும் நம் குழந்தைகளிடம் நாம் அதட்டியிருப்போம். ஆம் நமக்கு முக்கியமான பொருளாக அல்லது ஆபத்தான பொருளாக தெரியும் பலவற்றையும் குழந்தைகள் விளையாட்டுப் பொருளாகத்தான் நினைப்பர். அப்படி மருத்துவ வழக்குகள் சான்றிதழ் அடிப்படையிலேயே சந்தித்த சம்பவங்கள் உடன் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் குறித்த முழுமையான பாதுகாப்பு விவரங்களும் கொடுக்கிறார் அறுவைசிகிச்சையில் பத்து வருடங்கள் அனுபவம் வாய்ந்த மற்றும் குழந்தைகள் மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அபிராமி கிருத்திகா (MBBS, MS (General Surgery), DrNB (Pediatric Surgery), FICRS (Robotic Surgery), FALS (Robotic Surgery), EFIAGES (upper gi).‘சில மருத்துவ கேஸ் விவரங்கள் சொன்னால் குழந்தைகள் இப்படியெல்லாம் கூடவா விளையாடி உயிருக்கே ஆபத்தைக் கொண்டு வருவார்கள் என அதிர்ச்சியாக இருக்கும். ஒருசில உதாரணங்களுடன் சொல்லும்போது பெற்றோர்கள் எவ்வளவு கவனிப்புடன் இருக்க வேண்டும் என்பது புரியும். சிறிய பட்டன் அல்லது காயின் பேட்டரிகள், வழக்கமா வாட்ச், சிறிய எலக்ட்ரானிக் பொருட்களில் பயன்படுத்துவோம் . இந்த பட்டன் பேட்டரிகளை விழுங்கிய குழந்தைகளின் மருத்துவ வழக்குகள் அதிகம். குறிப்பாக இந்த பேட்டரிகள் மூக்கு, அல்லது வாயில் போட்டு ஈரம் பட்டவுடன் கெமிக்கல் வினைக்கு உட்பட்டு அலர்ஜிகளை உருவாக்கும். அல்லது சுவாசக் குழாய், உணவுக் குழாய்களில் துளைகளை உண்டாக்கும். இந்த காயின் பேட்டரிகள் விழுங்கி குழந்தைகளை கிட்டத்தட்ட உயிருக்குப் போராடுகிற சூழலில் பல பெற்றோர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்.
அடுத்து வாட்டர் பீட்ஸ், வண்ண மயமான பந்துகள், அவற்றை நீரில் போட்டவுடன் ஊறி ஜெல்லி பந்து போல் மாறிவிடும். இதனை கிராம் முதல் கிலோ கணக்கில் விழுங்கி சிகிச்சை பெற்ற குழந்தைகள் உள்ளனர். இதனால் இறந்த குழந்தைகள் பட்டியலும் அதிகம். பொதுவாக பார்க்க ஜெம்ஸ் மிட்டாய் போல இருக்கும் பட்சத்தில் குழந்தைகள் இந்த பீட்ஸை விழுங்கிவிடுவார்கள். உடலின் நீர் பட்டவுடன் அவைகள் அளவில் பெரிதாகி ஜெல்லி போல் உணவுக் குழாய் , சிறுகுடல் பகுதிகளை அப்படியே அடைத்துக் கொள்ளும். இதில் இருக்கும் பெரிய சிக்கலே இந்த பீட்ஸ்கள் நீருடன் கலந்து தெரிவதால் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் சோதனைகளில் தெரியாது. எனவே பிரச்னை என்ன என்று கவனிப்பதற்குள் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்றுவிடும். இதனால் குமட்டல், வாந்தி, பித்தம், ஆரம்பித்து பல பெரிய பிரச்னைகள் உண்டாகும். இதில் எண்டோஸ்கோபி செய்தாலும் இந்த கலர் பந்துகள் எண்டோஸ்கோபியை விடவும் கீழ் அல்லது நழுவும் வகையாக இருக்கும் . தொடர்ந்து சிறிய காந்த பந்துகள், இதுவும் அப்படித்தான்.
ஒரு பந்தாக இருந்தால் கூட அகற்றி விடலாம், சேர்ந்து பல பந்து களாக விழுங்கியிருந்தால் சிகிச்சையில் சிக்கல் அதிகமாக இருக்கும் ‘ என்னும் டாக்டர் அபிராமி கிருத்திகா தொடர்ந்து வீட்டின் சமையலறை பொருட்கள் சிலவையும் குழந்தைகளின் உடல் உறுப்புகள், சருமத்தை சேதாரம் செய்வதாகச் சொல்கிறார். ‘ஒரு சில குழந்தைகள் என்னதான் விலை உயர்ந்த பொம்மைகள் கொடுத்தாலும் அவர்களுக்கு தட்டினால் சத்தம் கேட்கும் சமையலறைப் பாத்திரங்கள்தான் வேண்டும். அப்படி இட்லி வேக வைக்கும் தட்டின் துளைகளில் சிறிய விரல் மாட்டிக்கொண்டு எடுக்கவே முடியாமல் தோல் கிழிந்து விரலை காப்பாற்றிய சம்பவங்களும் உள்ளன. இத்துடன் சமையலறைக் கத்தி, அரிவாள், வாய்ப்பகுதி சிறிய கிண்ணங்களை தலையில் கவிழ்த்துக் கொள்ளுதல் இப்படி நிறைய சொல்லலாம்’ அடுத்து குழந்தைகளுக்கான சாப்பிடும் பாத்திரங்கள், தட்டுகள், பொம்மைகள் வாங்கும் போது கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை கவனித்துப் பயன்படுத்துங்கள் என்கிறார் டாக்டர் அபிராமி கிருத்திகா.
‘0-3 மூச்சுத் திணறல் ஆபத்து ( 0-3 Choking Hazard) இப்படியான எச்சரிக்கை வாசகம் இருக்கும் பொம்மைகள் எதுவானாலும் தவிர்த்திடுங்கள். இவை பெரும்பாலும் 4 வயது அதற்கு மேலான குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள் என அறிவுறுத்துவதின் நோக்கம் அவற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக், பேட்டரி, பயன்படுத்தப்பட்ட நிறங்கள் என அத்தனையும் ஏதோ ஒரு வகையில் 0 – 3 வயதுக் குழந்தைகள் வாயில் பட்டால், அல்லது விழுங்கினால் மூச்சுத் திணறல் உண்டாகும் என்பதற்கான எச்சரிக்கை வாசகங்கள்தான். மேலும் குழந்தைகளுக்கான உணவுப் பாத்திரங்களில் கூடிய வரை பிளாஸ்டிக்கைத் தவிர்க்கவும். காரணம் தாய்ப்பாலை சேமிக்க பயன்படுத்தப்படும் பம்ப் மற்றும் சேகரிக்கும் டப்பாக்கள் இப்போது வரை உயர்ரக பிளாஸ்டிக்குகள்தான் பயன்படுத்தப் படுகின்றன. ஆனாலும் அவற்றால் கூட தாய்ப்பாலில் பிளாஸ்டிக் கலந்திருப் பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதே போல் இன்று வெளிப்புற ஆகாரங்கள் அத்தனைக்கும் உணவு டெலிவரியில் பிளாஸ்டிக்தான் பயன்படுத்தப்படுகின்றன. சாப்பிடும் உணவுகள், அதற்கு பயன்படுத்தப்படும் டப்பாக்கள் கூட இங்கே உலோகம், எவர் சில்வர் என கவனித்து பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொம்மைகள்,விளையாட்டுப் பொருட்களை தவிர்க்கவும். ஏனெனில் குழந்தைகளுக்கு பல் வளரும் தருணத்தில் எதைக் கொடுத்தாலும் கடிப்பார்கள் என்பதாலேயே இந்தக் கால கட்டத்தில் கூடுமானவரை பிளாஸ்டிக் வேண்டாம். கடித்தல், விரல்களை வாயில் சப்பிக் கொண்டே இருப்பது இவை எல்லாம் தடுக்கவும் கூடாது. வளர்சிதை மாற்றங்களால் நிகழும் நிகழ்வுகள் இவை. எனவே ஆரோக்கியமான உணவுகள், காய்கறிகளை கைகளில் கொடுப்பது நல்லது.
அதே போல சிலிகான் பொம்மைகள், அல்லது ஆபத்தில்லா பொம்மைகள் என்றாலும் அதில் பயன்படுத்தப்பட்ட நிறம் குறித்த எச்சரிக்கைகள் படித்து வாங்கவும். டால்கம் பவுடர்கள், பெரியவர்கள் பயன்படுத்தும் க்ரீம்களை குழந்தைகளுக்கு பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். பெரியவர்களுக்கான டால்கம் பவுடர்கள் குழந்தைகளின் பிறப்புறுப்புகளில் அலர்ஜி, துவங்கி ஓவரி கேன்சர் வரையிலும் கொண்டு வரும். மேலும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வயிற்று மற்றும் குடல் பகுதிகளை சுத்தம் செய்யும் குடல் புழு நீக்க சிகிச்சை (deworming) செய்வது மிக அவசியம்’ என்கிறார் டாக்டர் கிருத்திகா அபிராமி.
– ஷாலினி நியூட்டன்
The post இதெல்லாம் விளையாட்டுப் பொருட்களா? பெற்றோர்களே உஷார்! appeared first on Dinakaran.