இது மிகவும் சிறப்பான தருணம்... இந்திய கேப்டன் நிகி பிரசாத் பேட்டி

1 week ago 3

கோலாலம்பூர்,

2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடைபெற்றது. இதில் கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தென் ஆப்பிரிக்க வீராங்கனைகளை பார்ட்னர்ஷிப் அமைக்க விடாமல் இந்தியா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தியது.

20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய அந்த அணி 82 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக மீகே வான் வூர்ஸ்ட் 23 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் கங்கோடி திரிஷா 3 விக்கெட்டுகளும், வைஷ்னவி சர்மா, ஆயூஷி சுக்லா மற்றும் பருனிகா சிசோடியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 83 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 11.2 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 84 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக திரிஷா 44 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் தொடர்ந்து 2வது முறையாக இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி உள்ளது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் இந்திய கேப்டன் நிகி பிரசாத் கூறியதாவது, நாங்கள் அனைவரும் அமைதியாகவும், நிதானமாகவும் செயல்பட முயற்சி செய்தோம். எங்களது வேலையை சரியாக செய்துள்ளோம். மைதானத்தில் களம் இறங்கி எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டி உள்ளோம்.

எங்களுக்கு அனைத்து வசதிகளையும் சிறப்பாக செய்து கொடுத்த பி.சி.சி.ஐ-க்கு மிக்க நன்றி. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று உயரத்தில் இருக்கிறது. இது மிகவும் சிறப்பான தருணம். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article